மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

குழப்பும் அதிகாரிகள்: தவிக்கும் உணவு நிறுவனங்கள்!

குழப்பும் அதிகாரிகள்: தவிக்கும் உணவு நிறுவனங்கள்!

காவல் துறை மற்றும் அரசின் நெருக்கடிகளால் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைபடுவதாக உணவு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.

கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நாளான நேற்று (மார்ச் 25) அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க, உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் கடும் நெருக்கடிக்கு ஆளாகின. ஊரடங்கு நடவடிக்கை உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்றாலும், அதனை அமல்படுத்துவதில் உள்ளூர் அதிகாரிகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினர்.

ஆட்டோமொபல் தயாரிப்பு முதல் மின்னணு சாதனங்களின் உற்பத்தி வரை ஏற்கனவே பல நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அரசாங்கத்தின் அனுமதி இருந்தபோதிலும் அத்தியாவசிய மற்றும் மூலப் பொருட்களை கொண்டு சென்ற வாகனங்களை போலீசார் நிறுத்தினர். அவர்களை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து பொருட்களை கொண்டு செல்லவே அத்தியாவசிய சேவைப் பொருள் நிறுவனங்கள் முயன்றன.

வட இந்தியாவில் பிரட் விநியோகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் போன் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் அம்ரீந்தர் சிங், தங்கள் நிறுவனம் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுவதாகத் தெரிவித்தார்.

“உணவுப் பொருட்கள் கொண்டுசெல்வதை பிரதமர் அத்தியாவசிய சேவையாக அங்கீகரித்தபோதிலும், எங்கள் லாரிகள் சோதனைச் சாவடிகளில் காவல் துறையினரால் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்கின்றன. அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க சிறப்பு வாகனங்கள் வழங்கவும், எந்த இடத்தில் விநியோகிப்பது என்பதை தெரிவிக்கவும் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், இதுவரை அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. போக்குவரத்து பிரச்சினைகளால் உணவு தயாரிக்கும் மூலப்பொருட்கள் கிடைப்பதிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்று அம்ரீந்தர் சிங் தெரிவிக்கிறார்.

மருந்துகளின் விநியோகம் கூட பல இடங்களில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. “மருந்து ஒரு அத்தியாவசிய பொருளாக இருப்பதால் அதன் உற்பத்தி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் போக்குவரத்து காரணமாக சரியான வேகத்தில் கொண்டுபோய் சேர்க்க முடிவதில்லை. ஆகவே, தயாரித்த மருந்துப் பொருட்களை கொண்டுபோய் சேர்க்க சரியான வழிமுறைகள் விரைவாக வேண்டும்” என்று இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் நிர்வாகி கூறுகிறார்.

“நாங்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல்வேறு நபர்களை தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது. சில இடங்களில் காவல் துறையை அணுக வேண்டியிருக்கிறது. சில இடங்களில் மாஜிஸ்திரேட்டை அணுக வேண்டியுள்ளது. வேறு இடங்களில் வேறு பலரை அணுக வேண்டியுள்ளது. இதனால் நிறைய நடைமுறைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார். இதையும் தாண்டி தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் செயல்பாடுகள் தடைபடுவதாகவும் மருந்து நிறுவன நிர்வாகி குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற கவலைகள் எதிரொலியால் தங்களது நிறுவனம் ஆலைகள் மற்றும் கிடங்குகளை முழுத் திறனுடன் இயக்குவது கடினம் என பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகிறார். மேலும், “சில இடங்களில் எங்களை அனுமதிக்கிறார்கள்...சில இடங்களில் எங்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள். எங்களை அனுமதிக்கும் இடங்களில் சேவைகளை நாங்கள் தொடர்கிறோம். பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத்தையும் அத்தியாவசிய பொருட்களாக கருத வேண்டும். இல்லையெனில் அது மேலும் குழப்பத்தை உருவாக்கும் என நாங்கள் அரசிடம் கூறிவருகிறோம்” என்று தங்களது கவலையை வெளிப்படுத்தினார்.

கோத்ரேஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விவேக் காம்பீர், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தங்கள் நிறுவனம் உற்பத்தித் திறனை அதிகரித்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகளின் மிரட்டலை தடுக்க தெளிவான வழிமுறைகளை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தார். “தற்போது பல்வேறு தெளிவற்ற தன்மைகள் உள்ளன. தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தங்கள் பகுதியிலுள்ள கடைகளுக்கு பொருட்களை விநியோகிக்கச் செல்லும் விநியோகிஸ்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்று அவர் குற்றம்சாட்டினார்.

நெஸ்லே இந்தியா நிறுவனம், ஊரடங்கு காரணமாக சில இடங்களில் உற்பத்தியை நிறுத்திவைத்துவிட்டதாகவும், விநியோக மையங்கள் மற்றும் ஆலைகளின் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ளதாகவும் கூறுகிறது. “எங்களது நிறுவனம் உணவு மற்றும் பான விற்பனையில் இருப்பதால், பணிகள் நிறுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் விநியோக மையங்களை தொடர்ந்து இயங்க வைக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று 24ஆம் தேதி தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம், “அத்தியாவசிய பொருட்கள் விற்கும் அனைத்து கடைகளும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. மளிகை, பால், காய்கறிகள், பழம், இறைச்சி, மீன் போன்ற பொருட்கள் விற்பனையும் இதில் அடங்கும். அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் சென்று சேர்வதை கவனிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய தொழில்வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறைச் செயலாளர் குருபிரசாத் மோகபத்ரா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “உணவு தயாரிக்கும் நிறுவனங்களை தடுக்கக் கூடாது, மூடக்கூடாது” என்று கேட்டுக் கொண்டார். இதுபோன்ற அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு வழங்கப்படுவதை மத்திய அரசும், மாநில அரசுகளும் உறுதி செய்யும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய மாநிலம் மற்றும் மாவட்டங்கள் தோறும் ஹெல்ப்லைன் எண்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உணவுத் துறை மட்டுமல்லாமல் மற்ற தொழில் நிறுவனங்களும், தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தொடர்வது கடினமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அந்நிறுவனங்களின் ஊழியர்கள் பணிக்கு திரும்புவதில் பல சிக்கல்கள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் இதனை கவனிக்குமா?

த.எழிலரசன்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020