மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

மீண்டும் சேவையை தொடங்கும் ஆன்லைன் வணிக நிறுவனங்கள்!

மீண்டும் சேவையை தொடங்கும் ஆன்லைன் வணிக நிறுவனங்கள்!

ஆன்லைன் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் நபர்களுக்கு போலீசாரால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு இந்தியாவில் நேற்று முதல் ஆன்லைன் வணிக சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய மாநில அரசுகள் கூறுகின்றன. இதுபோன்ற சூழலில் ஆன்லைன் வணிகம் பெரும் பங்கை வகிக்கின்றன. ஆனால் போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளால் பொருட்களை டெலிவரி செய்யும் நபர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறி நேற்று ஆன்லைன் வணிகம் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தரப்பில், “தங்களுக்குத் தேவையான மருந்து பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியமான பொருட்களை மக்கள் வீட்டிலிருந்தே பெறுகிறார்கள். இருந்தபோதும் பொருட்களை டெலிவரி செய்பவர்களை காவல்துறையினர், சேவைகளை ரத்து செய்ய கோரி கொடூரமாக தாக்கியதாகவும், இதனால் அவர்கள் பல இன்னல்களை சந்தித்தனர் என்றும்” கூறப்பட்டது.

இதனால் தங்களுக்கு வரும் ஆர்டர்களை ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தின. எனினும் சில மணி நேரங்களில் வால்மார்ட்டுக்கு சொந்தமான ஃபிளிப்கார்ட், மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான சேவை மீண்டும் தொடங்கும் என்று அறிவித்தது.

”எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்களை உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் சுமுகமாக செல்ல அனுமதிப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குகிறோம்” என்று ஃபிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதுபோன்று ஆன்லைன் வணிக நிறுவனமான கிராஃபர்ஸ் செவ்வாய் இரவு தனது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தது. ஆனால், புதனன்று அரசுத் தரப்பில் ஆன்லைன் சேவைகளை தொடரலாம் என்று உறுதி அளித்ததை அடுத்து கிராஃபர்ஸ் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கிராஃபர்ஸ் தலைமை நிர்வாகி அல்பிந்தர் திண்ட்சா கூறுகையில், கடந்த சில நாட்களாக எங்கள் செயல்பாடுகளில் பல சிக்கல்களை எதிர்கொண்டோம். இருப்பினும் எங்கள் செயல்பாடுகளைத் தொடங்க உறுதுணையாக இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து மீண்டும் சேவைகளைத் தொடங்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மருந்து விநியோக நிறுவனங்களான 1 எம்ஜி, நெட்மெட்ஸ் மற்றும் மெட்லைஃப் ஆகிய நிறுவனங்கள் கூறுகையில், காவல்துறையினரின் தாக்குதல்களால் தங்களது ஆர்டர்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம் என்று தெரிவித்துள்ளது.

இதுபோன்று பால் பொருட்கள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் ஆன்லைன் வணிக நிறுவனங்கள் காவல்துறையினரின் நடவடிக்கைகளால் சேவைகளை நிறுத்தியதாகவும், பின்னர் உள்ளூர் அதிகாரிகளின் துணையுடன் சேவைகளைத் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த ஆன்லைன் வணிக நிறுவனங்கள், சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020