மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

இந்திய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்க ஹோட்டல்கள்!

இந்திய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்க ஹோட்டல்கள்!

கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக அமெரிக்காவில் வசிப்பிடம் இன்றி சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவ அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன் காரணமாக இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 21,297 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68, 489 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அமெரிக்கா முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக அமெரிக்காவில் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டது. அவ்வாறு விடுதிகளில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலான இந்திய மாணவர்களும் உள்ளனர். இந்தியாவிலும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால் சொந்த நாட்டிற்கும் திரும்ப முடியாமல், அமெரிக்காவிலும் வசிப்பிடம் இல்லாமல் சுமார் 2,50,000 இந்திய மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவும், இருப்பிடமும் வழங்க இந்திய-அமெரிக்க விடுதியாளர்கள் முன்வந்துள்ளனர். அதன்படி 700 ஹோட்டல்களில் உள்ள 6,000 அறைகள் இவர்களுக்கென ஒதுக்கப்படுவதாக இந்திய-அமெரிக்க விடுதி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இத்தகைய ஹோட்டல்கள் மாணவர்கள் பயின்றுவரும் கல்வி நிறுவனங்களுக்கு வெகு அருகிலேயே இருப்பதால் அது அவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

இந்திய-அமெரிக்க விடுதி உரிமையாளர்களின் இந்த உதவியைப் பாராட்டி அமெரிக்க இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்தியர்கள், இந்திய-அமெரிக்கர்கள் மற்றும் பிற விடுதி உரிமையாளர்கள் மக்களுக்கு வசிப்பிடம் அளித்து உதவ முன்வந்துள்ளதை நினைத்தால் மனம் இளகுகிறது. இவ்வாறு நாம் ஒன்றிணைந்து தான் கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் இருந்து மீண்டுவர முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் இந்திய மாணவர்களுக்கு உதவிகளை வழங்க 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது. அத்துடன் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உரிய வசிப்பிடம் அமைத்துக் கொடுக்கவும் தொடர்ந்து போராடி வருகின்றது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020