மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

கொரோனா: தமிழகத்தில் இரண்டாவது நபர் குணமடைந்தார் - விஜயபாஸ்கர்

கொரோனா: தமிழகத்தில் இரண்டாவது நபர் குணமடைந்தார் - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் மதுரையில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குணமடைந்தார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் பரவத் தொடங்கியதும் தமிழகத்தில் இதன் பாதிப்பு எதுவும் இல்லாமல்தான் இருந்தது. முதன்முதலாக ஓமனிலிருந்து சென்னை திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக இருக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

எனினும் நாளடைவில் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மாலை வரை 23ஆக இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 26ஆக அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து தமிழகத்துக்கான தேசிய சுகாதாரப் பணியகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “18 வயது இளைஞர் ஒருவர் கொரோனாவால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். துபாயிலிருந்து திரும்பிய 63 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து வந்த 66 வயது முதியவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது பெருந்துறை மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்தது.

இதனிடையே மதுரையில் ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் சற்று ஆறுதல் தரும் செய்தியாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது நபர் குணமடைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியிலிருந்து சென்னை வந்த இளைஞர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது நன்றாகக் குணம் அடைந்துள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட இரண்டு சோதனை முடிவுகளிலும் கொரோனா தோற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர் இரண்டு நாளில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் வேலை தேடி மார்ச் தொடக்கத்தில் டெல்லி சென்றுள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நண்பர்களிடம் சொல்லிவிட்டுக் கடந்த 10ஆம் தேதி ரயிலில் ஏறி இரண்டு நாட்கள் பயணம் செய்து மார்ச் 12ஆம் தேதி சென்னை வந்து அரும்பாக்கத்தில் உள்ள தனது நண்பர்கள் அறையில் தங்கியிருந்தார். காய்ச்சல் அதிகமானதால் கடந்த 16ஆம் தேதி அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்துள்ளார் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020