மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

வீட்டை மருத்துவமனையாக மாற்றும் கமல்ஹாசன்

வீட்டை மருத்துவமனையாக மாற்றும் கமல்ஹாசன்

தன்னுடைய வீட்டை மருத்துவமனையாக மாற்றுவதற்கு கமல்ஹாசன் முன்வந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18, 500 ஐத் தாண்டியுள்ளது. இதற்கு தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளார். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பலரும் தன்னார்வமாக முன்வந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். விசிகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், மருத்துவ உபகரணங்கள் வாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்” என்று கூறியுள்ளார்.

எழில்

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon