மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

சோனியா கடிதம்: கட்டிட தொழிலாளர்களுக்கு நிதியுதவி!

சோனியா கடிதம்: கட்டிட தொழிலாளர்களுக்கு நிதியுதவி!

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக வேலை இழந்து தவிக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டு பெரும் பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி வேலை செய்து வந்த பலரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘தடை நடவடிக்கைகள் முறைசாரா தொழிலாளர்களுக்குப் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் சுமார் 4½ கோடி கட்டிட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. முழு அடைப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகளால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கனடா போன்ற பல நாடுகள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நிதி திட்டங்களை அறிவித்துள்ளன. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் மாநில அரசுகள் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு சம்பளம், நிதியுதவி போன்ற உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். மேலும் , கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் 2019 மார்ச் 31 வரையில் 49,688.07 கோடி ரூபாய் செஸ் நிதி வசூலிக்கப்பட்டதாகவும், அதில் இதுவரை 19,379.92 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் வைரஸ் தாக்குதலால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு, செஸ் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கும்படி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் சந்தோஷ் குமார் காங்க்வார், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் /யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

1996ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் சட்டத்தின் படி, பத்து லட்சத்திற்கும் அதிக செலவில் கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களுக்கும் 1% தொகையை செஸ் நிதியாக BoCW வாரியங்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அவ்வாறு வசூலிக்கப்பட்ட நிதித் தொகையை கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கட்டுமான நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கோவிட்-19 நோயினால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் வரையில் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்திருந்தது. அதே போன்று ஹிமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மாநில அரசுகளும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் என்று அறிவித்திருந்தது.

இது வைரஸ் குறித்த பயத்துடன் வாழ்வாதாரம் குறித்தும் கவலையில் ஆழ்ந்திருந்த மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020