மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

வீட்டிலேயே கிருமிநாசினி: நீலகிரி மாவட்ட ஆட்சியர் யோசனை

வீட்டிலேயே கிருமிநாசினி: நீலகிரி மாவட்ட ஆட்சியர் யோசனை

கிருமிநாசிகளின் விலை உயர்வைத் தடுக்கவும், தட்டுப்பாட்டைப் போக்கும்வகையிலும் வீடுகளிலேயே கிருமிநாசினி தயாரிக்கும் முறையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் கோவிட் -19 நோய்க்கு இதுவரை முறையாக மருந்து கண்டறியப்படாத நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளே அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதாரத்தைப் பேணும் அத்தியாவசிய பொருள்களான முகக்கவசம், கிருமிநாசினிகள் போன்றவற்றின் தேவை அதிகரித்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கிருமிநாசினி தட்டுப்பாட்டை ஈடுகட்டும் வகையில் வீட்டிலேயே மிகச்சிறந்த கிருமிநாசினியைத் தயாரிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

“அதன்படி 320 கிராம் பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, நன்கு கலக்க வேண்டும், சிறிதுநேரம் கழித்து பிளீச்சிங் பவுடர் அடியில் தங்கியவுடன் தெளிந்த நீரை சேமித்து இதை ஒன்பது லிட்டர் தண்ணீருடன் கலந்து கிருமிநாசினியாகப் பயன்படுத்தலாம்.

இந்த முறையைப் பின்பற்றினால் வீட்டிலேயே மிக எளிமையாகக் கிருமிநாசினியைத் தயார் செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு ஒன்பது லிட்டர் கிருமிநாசினியும் கிடைக்கும். இதைக்கொண்டு வீடுகளிலும் பொது இடங்களிலும் தினமும் தெளித்து தற்காத்துக்கொள்ள முடியும்” என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon