மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ஒரு கோடி முட்டைகள் பாதிப்பு!

ஒரு கோடி முட்டைகள்  பாதிப்பு!

நாமக்கல் மண்டலத்தில் கோழிகளுக்குத் தீவனம் போட முடியாததால் தினசரி ஒரு கோடி முட்டைகள் வரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா பீதியால் தேக்கம் அடைந்த 16 கோடி முட்டைகள் குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன.

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் கடந்த ஒரு மாத காலமாக முட்டை மற்றும் கறிக்கோழி விற்பனை கடும் சரிவைச் சந்தித்து உள்ளது. இதனால் அவற்றின் விலையும் கிடுகிடு எனக் குறைந்தது.

கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்ததால் அவற்றை பண்ணையாளர்கள் நேரடியாக கிராமம், கிராமமாக வாகனங்களில் சென்று ரூ.2-க்கு விற்பனை செய்தனர். இருப்பினும் முட்டை விற்பனை சூடுபிடிக்கவில்லை. எனவே பண்ணையாளர்கள் வேறு வழியின்றி குளிர்பதன கிடங்குகளில் முட்டைகளை வைத்து வருகின்றனர். மேலும் கோழிகளுக்குத் தீவனம் போட பணம் இல்லாததால் சிலர் தீவனம் போடுவதைக் குறைத்து கொண்டனர். இதன் காரணமாக ஏறத்தாழ 30 சதவிகிதம் வரை முட்டை உற்பத்தி குறைந்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், “ஒரு கோழி நாள் ஒன்றுக்கு 110 கிராம் தீவனம் எடுத்துக் கொள்ளும். ஆனால், கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் பண்ணையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதால் 20 சதவிகித பண்ணையாளர்கள் 65 வாரத்துக்கு மேற்பட்ட வயதான கோழிகளுக்குத் தீவனம் போடுவதைத் தவிர்த்து வருகின்றனர். 30 சதவிகித பண்ணையாளர்கள் 55 கிராம் மட்டுமே தீவனம் போடுகிறார்கள். மீதமுள்ள 50 சதவிகித பண்ணையாளர்கள் மட்டுமே முழுமையான தீவனம் போட்டு வருகின்றனர். இதன் காரணமாக முட்டை உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் இந்த மாதத்தில் மட்டும் முட்டைக்கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடியும், கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.500 கோடியும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் வேறு வழியின்றி முட்டைகளை உத்தரப்பிரதேசம், பிகார், குஜராத் உள்ளிட்ட வடமாநிலம், நாமக்கல் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைத்து உள்ளனர். அந்த வகையில் ஏறத்தாழ 16 கோடி முட்டைகள் குளிர்பதன கிடங்குகளில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் முட்டையின் தேக்கம் கணிசமாகக் குறைந்து உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட எல்லைகள் மூடப்படுவது பண்ணையாளர்களுக்குக் கவலை அளிப்பதாக உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் கோழித்தீவனம் மற்றும் முட்டை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதே கிலோ ரூபாய்.14க்கு விற்பனை செய்யப்பட்ட மக்காச்சோளம் ரூ.17ஆக உயர்ந்து விட்டது. அவ்வாறு விலக்கு அளிக்காவிடில் கோழிப்பண்ணையாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். மேலும் தற்போது அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டைகள் நேரடியாக வினியோகம் செய்யப்படுவது போல, பள்ளி மாணவர்களுக்கும் வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

ராஜ்

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon