மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

கொரோனாவின் முதல் பலி! மதுரைக்கு மரண பயம் காட்டும் தாய்லாந்து தப்லீக் ஜமாத்!

கொரோனாவின் முதல் பலி!  மதுரைக்கு மரண பயம் காட்டும் தாய்லாந்து தப்லீக் ஜமாத்!

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

மார்ச் 25ஆம் தேதி இரவு 2 மணிக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், “தீவிர சிகிச்சை அளித்தும்கூட மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, கொரானோ பாசிட்டிவ் பாதிக்கப்பட்டவர் சில நிமிடங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார்.  அவர் நாள்பட்ட நுரையீரல் நோய், கட்டுப்பாடற்ற சர்க்கரை, ஹைபர் டென்ஷன் உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பீடிக்கப்பட்டு இருந்திருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகக்  கருதப்படும் இது முழுக்க சமூகத் தொற்று என்றும் அவருக்கும் வெளிநாட்டினரோடு தொடர்பு இல்லை என்றும் முதலில் தகவல்கள் வந்தன. ஆனால், இறந்தவர் முஸ்லிம் என்பதும் அவருக்கு தாய்லாந்து நாட்டினர் மூலமே கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும் அவரது மதுரை நண்பர்கள் மூலமாகத் தெரியவந்திருக்கிறது.  மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த நவுஷத் என்பவர்தான் உயிரிழந்திருக்கிறார். மதுரை அண்ணாநகரில் அவர் வசித்துவந்த தெரு முழுவதும் மருத்துவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

சமூகத் தொற்றுக்குள்ளாகி நவுஷத் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை மறுக்கும் அவரது நண்பர்கள் விரிவாகப் பேசினார்கள்.

 “இஸ்லாத்தில் இறை நம்பிக்கையை பரப்புவதற்கான இயக்கத்துக்கு தப்லீக் ஜமாத் என்று பெயர். இந்த வகையில்  தாய்லாந்து நாட்டின் தப்லீக் ஜமாத்  குழுவினர் மார்ச் இரண்டாவது வாரம் மதுரைக்கு வந்திருக்கிறார்கள். மார்ச் 12ஆம் தேதி அதிகாலை மதுரை வந்த அவர்கள் 12, 13 தேதிகளில் அவர்கள் மதுரை அண்ணா நகர் மசூதியில் இருந்திருக்கிறார்கள்.  அப்போது அவர்கள்  நடத்திய நிகழ்ச்சியில் நவுஷத்தும் கலந்துகொண்டிருக்கிறார்.  நவுஷத் ஏற்கனவே நுரையீரல் பிரச்சினைகளாலும், சர்க்கரை நோயாலும் அவதிப்பட்டு வந்திருக்கிறார். தாய்லாந்து தப்லீக் ஜமாத் குழுவினருடன் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில தினங்களிலேயே அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் அதிகமாக அவர் மதுரை அப்போலோ மருத்துவமனைக்குப் போயிருக்கிறார்,. அங்கே அவரை சோதித்த மருத்துவர்கள் சில நாட்களில் அவரை ராஜாஜி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.  முதலில் அவருக்கு  கொரோனா நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது. சில நாட்கள் கழித்து அனுப்பலாம் என்று நினைத்து அதன்பின் சோதனை செய்து பார்த்ததில்  அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருக்கிறது.  உடனடியாக அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். தீவிர சிகிச்சை கொடுத்தும்  நேற்று நள்ளிரவு அவர்  மரணம் அடைந்துவிட்டார். நவுஷத்துக்கு வெளிநாட்டு தொடர்பு இல்லை என்பதால்  இது முழுகக் முழுக்க உள்ளூரில் ஏற்பட்ட சமூகத் தொற்றாக இருக்கலாம் என்று முதலில் கருதினார்கள். ஆனால் அவர் வெளிநாட்டுக்குப் போகவில்லை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமான நாடான தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த தப்லீக் குழுவினரால்தான் கொரோனா வைரஸ் தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 

இதைவிட பேரதிர்ச்சியும் மதுரைக்குக் காத்திருக்கிறது. அதாவது அந்த தாய்லாந்து தப்லீக் குழுவினர் அண்ணா நகர் மட்டுமல்ல மதுரையின் பல மசூதிகளுக்கும் சென்றுள்ளனர். 12,13 தேதிகளில் அண்ணா நகர் மசூதியில் இருந்த தாய்லாந்து தப்லீக் ஜமாத் குழுவினர்  14, 15 தேதிகளில் பிர்தோஸ் நகர் மசூதிக்குச் சென்றுள்ளனர்.  16, 17 தேதிகளில் விளாங்குடி மசூதிக்கு சென்றுள்ளனர். 18, 19 தேதிகளில் செல்லூர் பழைய மசூதிக்கும், 20, 21 தேதிகளில் செல்லூர் புதிய மசூதிக்கும் சென்றுள்ளனர்.  22, 23 தேதிகளில் மலைப்பட்டி மசூதிக்கும் சென்றுள்ளனர்.  இத்தனை மசூதிகளுக்கும் சென்ற தாய்லாந்து தப்லீக் ஜமாத் குழுவினரால் மதுரையில் இன்னும் எத்தனை எத்தனை  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மசூதிகளுக்கு வழக்கமாக சென்றுவரும் இஸ்லாமியர்களிடையே கூடுதல் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தாய்லாந்து தப்லீக் ஜமாத் குழுவினரை மதுரைக்கு வரவழைத்தது யார் என்ற விசாரணை தீவிரமாக நடக்கிறது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்  ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்ததில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தொடர்ந்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து வந்த குழுவினரால் மதுரை, ஈரோடு என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இப்போது வலுத்திருக்கிறது.

-வேந்தன்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020