ஊரடங்கு உத்தரவு: யாருக்கெல்லாம் பொருந்தும்? யாருக்கெல்லாம் இல்லை?

public

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இதனைக் கட்டுப்படுத்த ஒரே தீர்வு மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்பதுதான் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த உத்தரவு யாருக்கெல்லாம் பொருந்தும், யாருக்கெல்லாம் பொருந்தாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் ராணுவம், ஆயுதப்படை, காவல்துறை, கருவூலம், பெட்ரோலியம், பேரிடர் நிர்வாகம், மின்சார உற்பத்தி, மின் பகிர்வு, தபால் நிலையம், தகவல் மையங்கள், வானிலை மையம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி அமைப்புகள் மூலம் நடைபெறும் தூய்மை சேவை மற்றும் குடிநீர் சேவைக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள், மருத்துவ நிர்வாகம், மருத்துவம் சார்ந்த உற்பத்தி, விநியோகம், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த மருத்துவமனைகள், மருந்துக்கடை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் ஆகியவை ஊரடங்கு உத்தரவு நாட்களில் செயல்படும்.

ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மளிகை, பழக் கடைகள், மாட்டுத் தீவனம் வழங்கப்படும் கடைகள் ஆகியவை திறந்திருக்கும்.

வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், ஏடிஎம்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு, இன்டர்நெட் சேவை, கேபிள், ஐடி மற்றும் ஐடி சார்ந்த தேவை செயல்படும் என்றாலும், இதில் தேவையான ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். அதுபோன்று அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம். பெட்ரோல், காஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்துக்கும் அனுமதி உள்ளது.

குளிர்சாதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், தனியார் பாதுகாப்பு சேவைகள் ஆகியவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து முழுமையாக முடக்கப்படும். இதில் அத்தியாவசிய சேவை வாகனங்கள் இயக்கப்படும். அனைத்துக் கல்வி நிலையங்கள் மூடப்படும்.

ஊரடங்கு காரணமாக வெளியே தங்க வேண்டியவர்கள், மருத்துவ அவசர ஊழியர்கள் போன்றவர்கள் தங்குவதற்கான ஹோட்டல்கள், தங்குமிடம் ஆகியவற்றுக்கு அனுமதியுண்டு. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்களுக்கு அனுமதியுண்டு,

சமூக, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, மத கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது. பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பின் இந்தியா திரும்பியவர்கள் சுகாதாரத் துறை அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதை மாவட்ட ஆட்சியர்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது 2005ஆம் ஆண்டு பேரிடர் நிர்வாகச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிமுறைகள் அனைத்தும் இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**கவிபிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *