கொரோனா – வீட்டில் இருப்பவர்களுக்கு வேலை தரும் அமேசான்

public

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கொரோனாவின் தாக்கத்தால் வேலையில்லாமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலையில் உலகின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம் வீட்டில் இருப்பவர்களுக்கு வேலை தர முன்வந்துள்ளது.

இதுகுறித்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், “பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளதால் அந்தந்த துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த கோடிக்கணக்கான ஊழியர்கள் உலகம் முழுவதும் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உலகம் இந்தக் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அதுவரை, வேலையில்லாமல் இருப்பவர்கள் தாராளமாக எங்களுடன் இணைந்து பணியாற்றலாம். நாங்கள் நல்ல சம்பளம் தருவதற்குத் தயாராக இருக்கிறோம். மீண்டும் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தற்காலிகமாக எங்களுடன் சேர்ந்து மக்களுக்கு உதவலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “நோய்த் தொற்றின் காரணமாக மக்கள் வெளியில் வருவதற்குப் பயந்து வீட்டுக்குள் இருக்கின்றனர். பல்பொருள் அங்காடி தொடங்கி மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் எங்களைப் போன்ற ஆன்லைன் நிறுவனங்களைத்தான் பெரிதும் நம்பி இருக்கின்றனர். அந்தப் பொறுப்பும் பயமும் எங்களுக்கும் இருக்கிறது’’ என்று கூறியவர்,

“எங்களின் தேவை இந்த நேரத்தில் மக்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. அதிலும் வயதில் முதியவர்களுக்குத்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாங்கள் எங்கள் தொழில்முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறோம். ஆன்லைன் விற்பனை அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து மக்களுக்குப் பணியாற்றி வருகிறோம். குறிப்பாக இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். முக்கியமாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருள்கள், முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளின் தேவைதான் மக்களிடத்தில் மிக அதிகமாக உள்ளன. மக்களுக்கு இந்த நேரத்தில் பணியாற்ற புதிய வாய்ப்புகளைத் தேடவில்லை. மாறாக, இருக்கும் வாய்ப்புகளை மட்டும் சிறப்பாகச் செயல்படுத்த திட்டமிட்டு முயன்று வருகிறேன். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டெழுந்து வர முடியும்” என்று கூறியிருக்கிறார் அவர்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *