லஞ்சம்: நள்ளிரவில் கைதான வேலூர் தனித்துணை ஆட்சியர்!

public

வேலூர் மாவட்டத்தில் ரூ.50ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் இரும்புலி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரஞ்சித் குமார்(31). இவர் தனது தந்தை முருகன் மற்றும் உறவினர் ராஜவேலு ஆகியோர் பெயரிலிருந்த 1.47 ஏக்கர் பூர்வீக விவசாய நிலத்தைத் தனது பெயருக்குப் பத்திரப்பதிவு செய்திருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்ணமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் நில வழிகாட்டு ஆவணங்களின் படி பத்திரங்களை வாங்கி பதிவு செய்துள்ளார்.

இதற்கான முத்திரை கட்டணம் குறைவு என்று கூறி அதனை ரஞ்சித் குமாரிடம் கொடுக்காமல் நிறுத்தி வைத்தது மட்டுமின்றி, கண்ணமங்கலம் சார் பதிவாளர் மணிகண்டன் வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரனுக்கு முறையீட்டுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து தனித்துணை ஆட்சியர் தினகரன், முத்திரைக் கட்டணம் புகார் குறித்து ரஞ்சித் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து ரஞ்சித் குமார் இவ்விவகாரம் குறித்துப் பேசுவதற்காக வேலூர் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது தினகரன் இவ்விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ளவும், நிறுத்தி வைக்கப்பட்ட பத்திரத்தை விடுவிக்கவும் ரூ.50 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகத் தெரிகிறது.

இவ்விவகாரம் நடந்துகொண்டிருக்கும் போதே தினகரன் தனித்துணை ஆட்சியர் பதவியிலிருந்து வேலூர் மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு அலுவலராகக் கடந்த ஜனவரி இறுதியில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். எனினும் அந்த பதவிக்குச் செல்லாமல் தனித்துணை ஆட்சியர் பதவியிலேயே தொடர்ந்துள்ளார் தினகரன்.

பின்னர், இதுபோன்று முத்திரை கட்டண குறைவு தொடர்பாக வந்த அனைத்து புகார் மனுக்களையும் விரைந்து முடிக்கத் திட்டமிட்டு, தனது கார் ஓட்டுநர் ரமேஷ்குமார் மூலம் புகார் தொடர்புடைய அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ரஞ்சித் குமாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ரஞ்சித் குமார் மீண்டும் தினகரனைச் சந்தித்து பத்திரத்தை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுத்தால் மட்டுமே பத்திரத்தை விடுவிக்க முடியும் என்று தினகரன் கூறியதையடுத்து அவரிடம் ரூ.50 ஆயிரம் தர ஒப்புக்கொண்ட ரஞ்சித் குமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்துதான் நேற்று இரவு கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பிடிபட்டுள்ளார் தினகரன். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய பணத்தை ரஞ்சித் குமாரிடம் கொடுத்து அதனைத் தினகரனிடம் கொடுக்க கூறியுள்ளனர். அதன்படியே ரஞ்சித் குமாரும் பணத்தை எடுத்து தனித்துணை ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அலுவலகத்தில் தினகரன் இல்லாததால் அவரை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். ஆய்வுக்காக வெளியில் சென்றிருப்பதாகவும், அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு ஏடிஎம் பக்கத்தில் காத்திருக்கச் சொல்லி ரஞ்சித் குமாரிடம் தினகரன் கூறியிருக்கிறார்.

அதன்படி பணத்துடன் காத்துக்கொண்டிருந்த ரஞ்சித் குமாரை நேற்று இரவு, தனது காரில் ஓட்டுநர் ரமேஷ் உடன் சென்று பார்த்துள்ளார். ரஞ்சித் குமாரை தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்றதுடன் அவர் வைத்திருந்த பணத்தைப் பெற்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை தினகரனின் காரை பின்தொடர்ந்து விரட்டி மடக்கிப் பிடித்து, அவரை கையும் களவுமாகக் கைது செய்துள்ளது. அதோடு, ரஞ்சித் குமார் கொடுத்த ரூ.50 ஆயிரத்துடன் அவரிடம் இருந்த மொத்தம் ரூ.2.44 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளது.

மேலும் ஓட்டுநர் ரமேஷ் குமாரிடமும், தினகரனிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று தினகரன் வீட்டிலும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தியுள்ளது. இதில் அவரது இல்லத்திலிருந்து கணக்கில் வராத ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவில் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தனித்துறை ஆட்சியர் கைது செய்யப்பட்டிருப்பது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *