மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவை அழைத்துப் பேசிய எடப்பாடி

வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவை அழைத்துப் பேசிய எடப்பாடி

நடந்தது என்ன?

“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை, அப்படி யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் காட்டுங்கள்...” என்று நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக அவருக்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் போராட்டம் பற்றியும் சட்டமன்றத்தில் முதல்வர் பேசினார். “வண்ணாரப்பேட்டையில் கலைந்து செல்லாமல் இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் அனுமதியின்றி போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். . தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது” என்றார் முதல்வர். முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்குப் பிறகும் வண்ணாரப்பேட்டை ஷாஹின் பாக் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் அதிமுக சென்னை மாசெக்கள் சிலர் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவினரிடம் பேசினார்கள்.

“ஒரு பதினைந்து, இருபது பேர் தயாராக இருங்கள். முதல்வர் உங்களை சந்திக்க வேண்டுமென்று விருப்பப்படுகிறார்” என்று அவர்கள் சொல்ல உடனே வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவினர் முதல்வரை சந்திக்கத் தயாரானார்கள்.

பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு வண்ணாரப்பேட்டை கூட்டமைப்புத் தலைவர் லத்தீஃப், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பெண்கள் என இருபது பேர் முதல்வரை அவரது கிரீன் வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்தனர். அவர்களோடு சென்னையின் அதிமுக மாசெக்களும் இருந்தனர். அதிகாரிகளும் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது போராட்டக் குழுவினரின் தலைவர் தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் வைக்க,

’ஒண்ணும் பயப்படாதீங்க. என்.ஆர்.சி. வந்து அஸ்ஸாமில் மட்டும்தான். தமிழ்நாட்டுகெல்லாம் அது வரவே வராது. அதுபோல என்பிஆரில் வந்து அப்பாவின் பிறப்புச் சான்றிதழ் உட்பட புதிதாக சேர்க்கப்பட்ட கேள்விகள் எல்லாம் ஆப்ஷனல்தான். அதை நிரப்பாமல் விட்டா கூட ஒண்ணும் ஆகாது’ என்று முதல்வர் சொல்ல, அதற்கு பதிலளித்த போராட்டக் குழுவினர், ‘நீங்க சொல்றீங்க. ஆனா அதையெல்லாம் நிரப்பாமல் விட்டுட்டா டவுட் சிட்டிசன் னு சொல்லி டி என போட்டுவிட்டால் நாங்கள்தான சார் அலையணும்?’ கேட்டிருக்கிறார்கள்.

உடனே முதல்வர், ‘ இல்லல்ல... அப்படி எதுவும் வராது. இப்ப சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேத்தின மாநிலங்கள்ல கூட இதே கேள்விகளோடதான் சென்சஸ் எடுப்பாங்க. அங்கேயும் இப்படித்தான் பண்ணப் போறாங்க. அதுபோல என்பிஆர் எடுப்பதற்காக பயிற்சி எல்லா மாநிலத்துலயும் கொடுத்து முடிச்சிட்டாங்க. தமிழ்நாட்லயும், மேற்கு வங்காளத்துலயும் மட்டும்தான் இனியும் நாம கொடுக்காம இருக்கோம். அதனால எதுக்கும் பயப்படாதீங்க. என்பிஆர் லாம் திமுக மேலே இருக்கும்போதுதான் கொண்டு வந்தது. இன்னிக்கு அவங்களே உங்களுக்கு ஆதரவா இருக்கிற மாதிரி பேசுறாங்க’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்.

அப்போது போராட்டக் குழுவினர், ‘ஐயா... நீங்க என் ஆர் சியை புறக்கணிப்போம்னு சட்டமன்றத்துல ஒரு தீர்மானம் கொண்டு வாங்க. வேளாண் மண்டலம் மத்திய அரசுதான் அறிவிக்கணும்ன்னா கூட நீங்கள் தீர்மானம் கொண்டு வந்தீங்க. 5, 8 பொதுத் தேர்வையும் ரத்து பண்ணி ஆணையிட்டீங்க. அதுபோல என். ஆர்.சி.யை கொண்டுவரமாட்டோம்னு ஒரு தீர்மானம் போட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். எங்களுக்கு அது போதும்’ என்று கூறினார்கள்.

அதற்கு முதல்வர் எடப்பாடி, ‘என்.ஆர்.சி. க்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமே இல்லை. அதப் பத்தி நீங்க கவலப்படாதீங்க. அதுபோல என்பிஆர்ல ஒரு சில விஷயங்களுக்காக நாங்க காத்துக்கிட்டிருக்கோம். உங்களை எல்லாம் விட்டுட மாட்டோம். கவலப்படாதீங்க. பயப்படாதீங்க. இன்னும் சில நாள்ல நான் அழுத்தம் திருத்தமா இதப் பத்தி பேசுறேன் கவலப்படாதீங்க” என பதில் சொல்லியிருக்கிறார்.

‘வர்ற மார்ச் 9 ஆம் தேதி சட்டமன்றம் தொடங்குது. நீங்க அதுலயே எங்களுக்கு தீர்மானம் பண்ணித் தரணும்’ என்று போராட்டக் குழுவினர் கேட்க, ‘வெயிட் பண்ணுங்க. நல்ல முடிவா எடுப்போம். நீங்க போராட்டத்தை முடிச்சுக்கங்க’ என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் முதல்வர்.

அதற்கு போராட்டக் குழுவினர், ‘நீங்க உறுதிமொழி கொடுத்தீங்கன்னா அதை நாங்க போராடும் மக்களிட்ட சொல்லுவோம்,. அவங்ககிட்ட பேசிதான் முடிவெடுக்கணும் ” என்று சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் முதல்வர், ’கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நல்ல முடிவு கிடைக்கும்’ என்று மீண்டும் சொல்லியிருக்கிறார்.

சுமார் அரைமணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவினருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் முதல்வர். ‘நல்ல முடிவு வரும்’ என்ற முதல்வரின் வாக்குறுதி சட்டமன்றத்தில் தீர்மானமாக வரும் வரை வாக்குறுதியாகவே இருக்கும் என்கிறார்கள் சந்தித்துவிட்டு வந்த போராட்டக் குழுவினர்.

ஏனெனில் இதேபோல பிப்ரவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை எஸ்டிபிஐ நிர்வாகிகளை அழைத்துப் பேசினார் முதல்வர். ஆனால் மறுநாள்தான் சட்டமன்றத்தில் வண்ணாரப்பேட்டை போராட்டத்தை முழுக்க முழுக்க விமர்சித்துப் பேசினார். எனவே எடப்பாடியின் இதுபோன்ற தனிப்பட்ட உத்தரவாதங்களை விட வெளிப்படையான அறிவிப்பையே எதிர்பார்க்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர்.

-ஆரா

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon