மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

குரூப் 1 முறைகேடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

குரூப் 1 முறைகேடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28) உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் முறைகேடு நடைபெற்றது பூதாகரமாகிய நிலையில், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”2016ல் நடைபெற்ற குரூப் 1 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. மனிதநேய அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ பயிற்சி மையங்களில் படித்து தேர்வு எழுதியவர்கள் அதிகளவு, குறிப்பாக 74 பேரில் 62 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பயிற்சி மையங்கள் ஆளும் கட்சியின் செல்வாக்கு மிக்கவர்களால் நடத்தப்படுவதால் மாநில போலீசார் விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வராது. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பொங்கியப்பன், சுப்பையா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, “உயர்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட பணியாளர்கள் வரை இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் டிஎன்பிஎஸ்சி தலைவராகப் பதவி வகித்தவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று வாதிட்டுள்ளார்.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “இந்த வழக்கு குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, “முறைகேட்டில் ஈடுபட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்,

பயிற்சி மையங்கள் சார்பில், ஒரே பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி அடைந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இதுகுறித்து சிபிஐ மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கவிபிரியா

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon