மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பார்க்கிங் உதவியாளர் பணிக்குக் குவிந்த பட்டதாரிகள்!

பார்க்கிங் உதவியாளர் பணிக்குக் குவிந்த பட்டதாரிகள்!

சென்னையில் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் பல இடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் டிஜிட்டல் முறையில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வரும் திங்களன்று, சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் 2000க்கும் அதிகமான வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் என்ற முறையை மாநகராட்சி செயல்படுத்தவுள்ளது.

இந்நிலையில் பார்க்கிங் இடங்களை நிர்வகிப்பதற்கு உதவியாளர்கள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தால் போதுமானது. அதுபோன்று தற்போது வரை இந்த பணிக்கு ஓய்வுபெற்ற ஆயுதப்படை வீரர்கள் அல்லது பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட பார்க்கிங் உதவியாளர் பணிக்கு பட்டதாரி இளைஞர்களே பெரும்பாலும் விண்ணப்பித்துள்ளனர். 1400 பேர் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் இதில் 70 சதவிகிதம் பேர் பட்டதாரி இளைஞர்களும், குறிப்பாக 50 சதவிகிதம் பேர் பொறியியல் படிப்பை முடித்தவர்களுமே விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்பை முடித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காததால் குறைந்த ஊதியத்தில் பல்வேறு வேலைகளில் சேர்ந்து வரும் நிலையில் தற்போது பார்க்கிங் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளது, நாட்டில் எந்த அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது.

”பார்க்கிங் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் பலர் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் படித்தவர்கள். பார்க்கிங் நிர்வாகத்தின் டிஜிட்டல் முறையை மேம்படுத்துவதற்கு இந்த நபர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இந்த பணிக்கு உண்மையான தகுதி எஸ்.எஸ்.எல்.சி.” என்று பார்க்கிங் மேலாண்மை முறையைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த பணிக்கு 1400 பேர் விண்ணப்பித்த நிலையில், 1000 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் திங்களன்று பணியில் சேரவுள்ளனர். இந்நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பித்த சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்ற ஒருவர் கூறுகையில், “ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் மந்த நிலை காரணமாக, நான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவிபிரியா

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon