மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சென்னையைத் தொடர்ந்து திருச்சியிலும் போராடத் தடை- ஏன்?

சென்னையைத் தொடர்ந்து திருச்சியிலும் போராடத் தடை- ஏன்?

நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போராட்டத்துக்கு எதிராக பல இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். டெல்லி வன்முறைக்குப் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை நீட்டிக்கப்பட்டது. ஒரு வேளை போராட்டம் நடத்த வேண்டும் என்றால் 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இப்போது இதே போன்ற தடை உத்தரவு இந்நிலையில் திருச்சியிலும் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 12 வரை 15 நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கூடுவதோ, கூட்டங்கள் நடத்துவதோ கூடாது என்றும் ஆணையர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சியில் கடந்த சில தினங்களாக சிஏஏவுக்கு எதிராக பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் பெரிய அளவில் நடத்தப்பட்டன. கடந்த 22ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சிஏஏவுக்கு எதிராக தேசம் பாதுகாப்போம் மாநாடு நடைபெற்றது. சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் முஸ்லிம்களால் மட்டுமே நடத்தப்படுவதாக தகவல்கள் பரவும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் பேரணி அதை பொய்யாக்கியது. அனைத்து தரப்பினரும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவதை விடுதலை சிறுத்தைகளின் போராட்டம் எடுத்துக் காட்டியது.

இந்நிலையில், 23 ஆம் தேதி மக்கள் அதிகாரம் சார்பில் சிஏஏவுக்கு எதிராக ’அஞ்சாதே போராடு’ என்ற தலைப்பில் சிஏஏ எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதுமட்டுமல்ல திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதிகளில் கடந்த எட்டு நாட்களுக்கும் மேலாக சிஏஏவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிற நிலையில், அடுத்த கட்டமாக தமிழகத்தின் பல அமைப்புகள் திருச்சியையே போராட்டக் களமாக தேர்ந்தெடுத்து வருகின்றன. இதன் காரணமாகவே திருச்சியில் போராட்டம் நடத்த மாவட்ட காவல் ஆணையர் தடை விதித்துள்ளார் என்கிறார்கள்.

போலீஸ் தரப்பில் கேட்டால், “தடையை மீறியும் பலர் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வழக்குப் பதிவு செய்யப்பட்டுத்தான் வருகிறது. பொதுக்கூட்டங்கள், பேரணிக்கு தடையில்லை. போராட்டங்களுக்குத்தான் தடை விதிக்கப்படுகிறது” என்கிறார்கள்.

கவிபிரியா

புதன், 26 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon