மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்: அரசு பதிலளிக்க உத்தரவு!

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்: அரசு பதிலளிக்க உத்தரவு!

சிலை கடத்தல் தொடர்பான விவகாரத்தில் 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வந்த ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் கடந்த மாதம் சிலை கடத்தல் தொடர்பான விசாரணை ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

இதனிடையே வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் தமிழகத்தில் உள்ள பழைமையான சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கும் தொடர்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலை கடத்தல் குறித்துப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் ஆவணங்களைக் காணவில்லை என்றும் இதனால் இந்த வழக்குகள் கைவிடப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர். எனவே ஆவணங்கள் மாயமானது தொடர்பாகத் தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தினால் இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், காவல் துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. பிற மாநிலங்களிலிருந்து காவல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவரைச் சிறப்பு அதிகாரியாக நியமித்து, நீதிமன்ற மேற்பார்வையில் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான 41 ஆவணங்கள் மாயமானது குறித்து தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதன், 26 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon