மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

தேசியகீதம் பாடும் இளைஞர்கள்: இரக்கமின்றி தாக்கும் போலீஸ்!

தேசியகீதம் பாடும் இளைஞர்கள்: இரக்கமின்றி தாக்கும் போலீஸ்!

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் வன்முறை வெடித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீசார் வன்முறையைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள அதேசமயத்தில், போலீசார் 5 இளைஞர்களைத் தாக்குவது குறித்து வெளியான வீடியோ பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

அந்த வீடியோவில் 5 இளைஞர்களை போலீஸார் கடுமையாகத் தாக்குகின்றனர். ரத்தம் வழியப் படுத்திருக்கும் அவர்களை வீடியோ எடுத்தபடியே போலீசார் கால்களாலும், லத்தியாலும் அடித்து துவைக்கின்றனர். அப்போது ஒரு போலீசார் தேசிய கீதம் பாடச் சொல்லிக் கேட்பதும், மற்றொருவர் இந்தியாவில் தானே இருக்கிறாய் வந்தேமாதரம் சொல் என்று வற்புறுத்துவதும், மற்றொருவர் குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ’விடுதலை’ (அசாதி) என்ற வார்த்தையையும் சொல்ல வற்புறுத்துவதும் பதிவாகியுள்ளது.

அந்த இளைஞர்கள் தேசிய கீதம் பாடிய போதும் போலீசார் தாக்குவதும், வலி தாங்க முடியாமல் இளைஞர்கள் கதறுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ ஷாஹீன் பாக் போராட்டக் குழு ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த நபர்கள் யார், எதற்காக தாக்கப்படுகிறார்கள், என்ற விவரங்களும் தெரியவரவில்லை. இந்நிலையில் டெல்லி காவல்துறைக்கு எதிராகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இதுதான் டெல்லி போலீஸ் தேசிய கீதத்துக்குக் கொடுக்கும் மரியாதையா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

-கவிபிரியா

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon