மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

அப்பல்லோவில் அன்பழகன்: இப்போது எப்படி இருக்கிறார்?

அப்பல்லோவில் அன்பழகன்: இப்போது எப்படி இருக்கிறார்?

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று (பிப்ரவரி 24) இரவு சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

98 வயதான அன்பழகன், மூப்பின் காரணமாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் கீழ்ப்பாக்கத்திலுள்ள தனது வீட்டிலேயே இருந்து ஓய்வெடுத்து வருகிறார். பல மாதங்களாகவே

உணவு உட்கொள்ள முடியாமல் திரவ ஆகாரங்களையே உண்டு வருகிறார் அன்பழகன்.

சிற்சில வார்த்தைகளை பேசி வந்த பேராசிரியர் அன்பழகனின் காதுகள் நன்றாகக் கேட்கின்றன. தற்போது மாற்றப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட அவரிடம் வந்து ஆசிபெற்றுச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து நேற்று இரவு திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோ சென்று அன்பழகனுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றிக் கேட்டறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் அங்கே இருந்த ஸ்டாலின் இரவு 10 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். நேற்று இரவு முதல் அன்பழகனுடன் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொள்கின்றனர்.

இன்று காலை மீண்டும் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பேராசிரியரின் உடல் நலம் பற்றி மருத்துவர்களிடம் விசாரித்தார். ‘இன்னும் கண் திறக்கவில்லை. உறங்கிக்கொண்டிருக்கிறார். சுவாசிப்பதில் கஷ்டம் இருக்கிறது. மூப்பின் காரணமாக நெஞ்சு சளி ஏற்பட்டுள்ளது, சில மணி நேரங்கள் கழித்தே எதையும் சொல்ல முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

-வேந்தன்

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon