கொரோனா வைரசால் சீனாவில் தீவிர சுகாதார அவசரநிலை நிலவுவதாகச் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இன்று (பிப்ரவரி 23) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதி முதல், கொரோனா வைரஸ் சீனாவை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இதன் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் நாட்டிலிருந்து சீனாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று இந்தியா உட்படப் பல நாடுகளும் தடை விதித்துள்ளன. முதலில் கடல் உணவு சந்தையிலிருந்து மனிதருக்கு இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்படும் நிலையில் தற்போது மனிதரிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் சீன சுகாதாரத் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தலைவலி,இருமல்,மேல் சுவாசக் கோளாறு,தொண்டை கரகரப்பு, காய்ச்சல், உடல் சோர்வு என கொரோனாவின் அறிகுறி என்பது சாதாரண காய்ச்சலுக்கு ஏற்படக்கூடிய அறிகுறியாகத் தான் இருக்கிறது. ஆனால் இதன் வீரியம் முதலில் நுரையீரலைப் பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயத்தில் உடலுறுப்புகளைச் செயலிழக்கவும் செய்கிறது என்கின்றனர். மேலும் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் ஆன்டிவைரல் மருந்துகள் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்குச் செலுத்தும் போது அது வேலை செய்வதில்லை. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் தான் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் உலகையே அச்சுறுத்தும் இந்த வைரசால் சீனாவில் மட்டும் இதுவரை 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர், 76000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை உருவாகியிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டதில் ஏற்பட்ட குளறுபடிகளிலிருந்து சீனா பாடம் கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், மிக வேகமாகப் பரவும் இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குக் கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கொரோனாவால் சீனாவில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்படப் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மாஸ்க் தட்டுப்பாடு இருப்பதாகச் சீன சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா எதிரொலியாகப் பலர் பிளாஸ்டிக் கவர்களால் உடலை முழுதும் போர்த்திக் கொண்டு விமானங்களில் பயணிக்கின்றனர்.