மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

பயப்படும் ரஜினி நல்லாட்சி கொடுப்பது எப்படி?: கவுதமன்

பயப்படும் ரஜினி நல்லாட்சி கொடுப்பது எப்படி?: கவுதமன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகவே பயப்படும் ரஜினியால் எப்படி நல்லாட்சியைக் கொடுக்க முடியும் என்று தமிழ் பேரரசு கட்சித் தலைவரும், இயக்குநருமான கவுதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (பிப்ரவரி 23) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்களை அடித்தது என்பது கொடூரமான வன்முறை. அந்த வன்முறையைத் தொடர்ந்து , 9 நாளாகப் போராட்டம் நடந்து வரும் நிலையில் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது நேர்மையற்ற செயல். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பார் என்பது தான் வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் கலந்துகொள்ளும் பெண்களின் குரலாக இருக்கிறது” என்றார்

மேலும் அவர், “இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் குரல் கொடுப்பேன் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்த பிறகும் குரல் கொடுக்கவில்லை என்பது அவரின் நேர்மையற்ற போக்கைக் காட்டுகிறது.

இதுமட்டுமின்றி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகாமல், வழக்கறிஞரை அனுப்பி எழுத்துப்பூர்வமாகக் கேள்விகளைக் கொடுங்கள் பதில் அளிக்கிறேன் என்று பயந்தாங்கோலித்தனமான ஒரு முடிவை எடுத்தது என்பது அவர் எப்படி மக்களை காப்பாற்றுவார் என்று கேள்வி எழுகிறது.

மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காகக் குரல் கொடுக்க முடியாமல், மக்களைப் பார்த்துப் பயப்படும் உங்களால் எப்படி நல்லாட்சியைக் கொடுத்துவிட முடியும். திரையில் நடிகராக இருக்கும் நீங்கள் தரையிலும் நடிப்பைக் காட்டாமல் நேரடியாகச் சென்று சமூக விரோதிகளை அடையாளம் காட்ட வேண்டும். இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராவதுதான் உங்களுக்கு அழகு” என்று தெரிவித்துள்ளார் வ. கவுதமன்.

முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர் என்று துப்பாக்கிச் சூடு தொடர்பான கேள்விக்கு ரஜினி பதில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று ரஜினிக்கு ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு ரஜினி சார்பில், நேரில் வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி விலக்கு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon