தமிழில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்று 1977ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், பல இடங்களில் பெயர் பலகைகளில் தமிழ் இடம்பெறாமல் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், “பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டுமென பல கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. இதனை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு வெகு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். அபராதத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது. இதற்கான அதிகாரம் தமிழ் வளர்ச்சித் துறைக்கு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இல்லாத நிலை உள்ளதாகவும் அதை தார் பூசி அழித்திடும் நடவடிக்கையில் இறங்கவும் தமிழ் வளர்ச்சித்துறை தயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.
த.எழிலரசன்