மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: ஒருவர் பலி!

கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: ஒருவர் பலி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் தொடங்கிய, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 23) புதுக்கோட்டை, கோவை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

கோவை, செட்டிப்பாளையத்தில் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார். 1000க்கும் அதிகமான காளைகளுடன் மல்லுக்கட்ட 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கார், டூ வீலர் மற்றும் தங்க நாணயங்கள் வழங்கப்படுகின்றன.

புதுக்கோட்டையிலும் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. திருவப்பூர் கவிநாடு கிராமத்தில் நடைபெறும் போட்டியைச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டில் 850 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

நாமக்கல் போடிநாயக்கன்பட்டியில் நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டு போட்டியை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். இதில் 400க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டு உற்சாகத்துடன் விளையாடி வருகின்றனர்.

இதுபோன்று தமிழகத்தில் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் திண்டுக்கல்லில் நடந்த போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நல்லமநாயக்கன் பட்டியில் புனித வனத்து அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட நத்தம் அடுத்துள்ள வெல்ல குட்டு கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நாகராஜ் காளை முட்டியதில் உயிரிழந்தார்.

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon