மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

நாசா செல்லும் நாமக்கல் மாணவி: அரசு நிதியுதவி!

நாசா செல்லும் நாமக்கல் மாணவி: அரசு நிதியுதவி!

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் செல்லும் நாமக்கல் மாணவி அபிநயாவுக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் சார்பில் கோ ஃபார் குரு என்ற பெயரில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் நாசாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற இந்த இணையத் தேர்வில், நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் அபிநயா தேர்ச்சி பெற்றார். 9ஆம் வகுப்பு மாணவியான அபிநயாவுக்கு நாசாவுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்த போதும், பொருளாதார வசதி இல்லை என்பதால் அவரால் அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அபிநயா நாசா சென்று வர உதவும் வகையில் அவருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மாணவி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்குச் செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது அவரது திறமைக்குக் கிடைத்த வெற்றி ஆகும். விண்வெளித் துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி அபிநயா கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித் துறையில் இதுபோன்று பற்பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். அவரின் சாதனையைப் பாராட்டி வரும்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாமக்கல் சென்றிருந்த மின்துறை அமைச்சர் தங்கமணி மாணவியை அழைத்து ரூ. 2லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

-கவிபிரியா

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon