மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

3589 டன் தங்க சுரங்கமா?: இந்திய புவியியல் ஆய்வு மையம்!

3589  டன் தங்க சுரங்கமா?: இந்திய புவியியல் ஆய்வு மையம்!

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 3589 டன் எடை கொண்ட இரு தங்க சுரங்கங்கள் உத்தரப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சோன் பகாதி, ஹார்தி ஆகிய இரு இடங்களில் பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தங்க சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட சுரங்கத் துறை அலுவலர் கே.கே. ராய் கடந்த 21ஆம் தேதி தெரிவித்தார். சோன் பகாதியில் 2,943.26 டன் எடை கொண்ட சுரங்கமும்,ஹார்தியில் 646.16 டன் எடை கொண்ட சுரங்கமும் இருப்பதாகவும், இது இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் இருப்பை விட 5 மடங்கு அதிகம், இதனை வெட்டி எடுக்க இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டதாகவும், நில அளவீடு தொடங்கப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் உபியில் தங்க சுரங்கம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.ஐ இயக்குநர் ஜெனரல் எம்.ஸ்ரீதர் இதுகுறித்து கூறுகையில், ”இதுபோன்ற தகவல்களை புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த யாராலும் வழங்கப்படவில்லை.. சோன்பத்ரா மாவட்டத்தில் இத்தகைய பரந்த அளவிலான தங்க சுரங்கங்களை ஜி.எஸ்.ஐ மதிப்பிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக 1998-99 மற்றும் 1999-2000 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் புவியியல் ஆய்வு இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், “சோன்பத்ரா மாவட்டத்தில் 52,806.25 டன் தாதுக்கள் இருப்பது தெரியவந்தது. இதில் ஒரு டன் தாதுவில் 3.03 கிராம் தங்கம் தான் கிடைக்கும். அதன்படி பார்த்தால் மொத்தமாக 160 கிலோ தங்கம் தான் கிடைக்கும். ஊடகங்கள் கூறியவாறு 3589 டன் தங்கம் அல்ல” என்று கூறியுள்ளார்.

-கவிபிரியா

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon