மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

அடையாற்றில் இறங்கி போராடிய திமுகவினர்!

அடையாற்றில் இறங்கி போராடிய திமுகவினர்!

அடையாற்றங் கரையோரம் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டுவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி போராட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் பருவமழையின்போது அடையாற்றுக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனையடுத்து, சைதாப்பேட்டை அடையாறு ஆற்றங்கரையோரம் 875 மீட்டர் தூரத்திற்கு 15 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை கடந்த 13ஆம் தேதி பார்வையிட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், கட்டுமானப் பணிகளின் தரம் மோசமாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், கட்டுமானப் பணிகளில் உண்மைத் தரம் குறித்து ஆய்வு செய்து, முறைகேடு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக தமிழக அரசிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திமுகவினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் இந்த முறைகேடுகளை கண்டித்தும், விசாரணை நடத்த வலியுறுத்தியும் திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் தலைமையில் அடையாறு ஆற்றங்கரையில் கட்டப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புச் சுவர் அருகே இன்று (பிப்ரவரி 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், “அடையாற்றங்கரையோரம் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டுவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. வெள்ளத் தடுப்புச் சுவர் முறைகேடு குறித்து பொதுப்பணித்துறை செயலாளரிடம் கடிதம் கொடுத்தும் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், நடைபெற்றுள்ள பல கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெள்ளத் தடுப்பு, குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் செலவழிக்கப்படுவது இந்த லட்சணத்தில் தானா? பணிகள் நடக்கிறதா? அல்லது பணிகள் நடப்பதாகக் கணக்குக் காட்டப்படுகிறதா? அனைத்து மாவட்டக் கழகங்களும் இதனைக் கண்காணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

த.எழிலரசன்

சனி, 22 பிப் 2020