மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

இந்தியாவில் இன்னொரு கொரோனா: எச்சரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி!

இந்தியாவில் இன்னொரு கொரோனா: எச்சரிக்கும்  உச்ச நீதிமன்ற நீதிபதி!

இந்தியாவில் அநீதி மற்றும் சமத்துவமின்மை போன்ற உணர்வுகள் பெருமளவில் உருவாகியிருப்பதாகவும், இது கொரோனாவைப் போல் மாறுவதற்கு முன்னதாக சரிசெய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

டெல்லியில் இன்று (பிப்ரவரி 22), நீதித்துறையும் மாறி வரும் உலகமும் என்ற தலைப்பில், சர்வதேச நீதித்துறை மாநாடு 2020 நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், நீதிபதி அருண் மிஷ்ரா மற்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள், இன்னாள் நீதிபதிகள், 24 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ”1.3 பில்லியன் இந்தியர்களும், சமீபத்தில் வெளியான தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர் என்று அயோத்தி வழக்கைச் சுட்டிக்காட்டினார். உலகளாவிய விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட அயோத்தி நில தகராறு வழக்கு குறித்துப் பல அச்சங்கள் வெளியாகின. ஆனால் என்ன நடந்தது?. மக்கள் அனைவரும் தீர்ப்பினை ஏற்றுக்கொண்டனர்” என்றார்.

”திருநங்கைகளுக்கான உரிமைகளைச் சட்டமாக்குவதன் மூலமும், முத்தலாக்கிற்கு எதிராகச் சட்டத்தை இயற்றுவதன் மூலமும் தனது அரசாங்கம் விரைவாகவும் “நவீன சமுதாயத்தின் தேவைகளுக்கு முழுமையான உணர்திறன் மற்றும் பதிலளிப்புடனும் செயல்படுகிறது” என்றும் குறிப்பிட்டார்.

பாலின நீதியிலும் இந்தியா பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கல்வி நிறுவனங்களில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிகளவு சேர்கின்றனர். தேர்தல்களில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், “பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து அதனை உள்நாட்டில் செயல்படுத்தும் பல்துறை மேதை” என்று புகழ்ந்துள்ளார்.

”இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம். இந்த ஜனநாயகம் எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களால் சர்வதேச சமூகத்தில் இந்தியா நட்பான நாடாகத் தொடர்ந்து இருக்கிறது. நீதித் துறையை வலுப்படுத்துவது என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு. நாடாளுமன்றம் என்பது இதயம். நிர்வாகம் என்பது மூளை. இந்த மூன்று உறுப்புகளும் சுயாதீனமாக செயல்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி அருண் மிஸ்ரா, “அநீதி மற்றும் சமத்துவமின்மை பற்றிய உணர்வு நம்மிடையே பெரியளவில் உருவாக்கப்படுகிறது. இது கொரோனாவைப் போல மிகக் கொடூரமானதாக மாறுவதற்கு முன்பு நம் அனைவராலும் சரி செய்யப்படவேண்டும்” என்று எச்சரித்தார் .

-கவிபிரியா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon