மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

கொரோனா: அனாவசியமாக சிங்கப்பூர் செல்ல வேண்டாம்!

கொரோனா: அனாவசியமாக சிங்கப்பூர் செல்ல வேண்டாம்!

அவசியம் இல்லாமல் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து பரவும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன்படி இன்று (பிப்ரவரி 22) டெல்லியில் கொரோனா வைரஸ் (COVID19) தொடர்பாக மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிலை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆயத்தங்கள் குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம், விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்களின் செயலாளர்கள், வெளி விவகார அமைச்சகம், உள்துறை அமைச்சகம், குடிவரவு பணியகம்,மற்றும் ராணுவத்தின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். .

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், “ இன்றியமையாத சூழல் என்றால் சிங்கப்பூருக்கு செல்லலாம், இல்லையென்றால் செல்ல வேண்டாம்” என்று மக்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சீனா, ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவின் 21 விமான நிலையங்களுக்கு வரும்போது கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இன்றைய கூட்டத்திற்குப் பின் வரும் திங்கள் கிழமை (பிப்ரவரி 24 )முதல் காத்மாண்டு, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மலேசியாவிலிருந்து வரும் விமானப் பயணிகளும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வருடந்தோறும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் சீனாவில் இருந்து பரவும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரிலும் பீதியை ஏற்படுத்தியது. சிங்கப்பூர் அரசு ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டது. இது அதிகபட்ச எச்சரிக்கைக்கு முந்தைய நிலையாகும். இந்த நிலையில்தான் சிங்கப்பூருக்கு அவசியம் இல்லாமல் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

-வேந்தன்

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon