மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

நிர்பயா குற்றவாளி மனநலம் பாதிக்கப்படவில்லை: திகார் சிறை!

நிர்பயா குற்றவாளி மனநலம் பாதிக்கப்படவில்லை: திகார் சிறை!

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா மன நலம் பாதிக்கப்பட்டதற்கான எந்த ஒரு மருத்துவ பரிசோதனை அறிக்கையும் இல்லை என்று விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 3ஆம் தேதி காலை நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் வினய் சர்மா சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைப் பிப்ரவரி 21ஆம் தேதி தாக்கல் செய்திருந்தார். அதில் வினய் சர்மா சிறை சுவரில் தலையை வேகமாக மோதிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவர் மனநலம் மற்றும் உடல் ரீதியாகப் பாதிப்படைந்து, தனது தாயைக் கூட அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு குறித்து 22ஆம் தேதி சிறைத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிபதி தர்மேந்திர ரணா வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வினய் சர்மா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான எந்த ஒரு மருத்துவ பரிசோதனை குறிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. திகார் சிறை சார்பில் அரசு வழக்கறிஞர் இர்ஃபான் அகமது வாதிடுகையில், வினய் சர்மா சிறை சுவரில் தலையை முட்டிக்கொண்டு காயம் ஏற்படுத்திக்கொண்டதற்கான சிசிடிவி காட்சிகள் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். குற்றவாளிகள் அனைவரும் சிறை மருத்துவர்களால் தவறாமல் பரிசோதிக்கப்படுகிறார்கள். குற்றவாளிகளின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் உள்ளது. இதில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறியது போன்று வினய் சர்மா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான மருத்துவக் குறிப்பு எதுவும் இல்லை. ஏ.பி.சிங் தவறான தகவல்களைத் தெரிவித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திகார் சிறை நிர்வாகம் குற்றவாளிகளின் குடும்பத்தினரைக் கடைசியாகச் சந்தித்துக்கொள்ளலாம் என்று குற்றவாளிகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. தூக்கிலிடுவதற்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், இம்முறையாவது 4 பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கவிபிரியா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon