மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

திருச்சியில் இருந்து புதிய விமானங்கள்!

திருச்சியில் இருந்து புதிய விமானங்கள்!

திருச்சி விமான நிலையத்திலிருந்து போதிய அளவிற்கு விமான சேவைகள் முக்கிய நாடுகள் மற்றும் நகரங்களுக்கு இல்லை என்ற குறை திருச்சி சுற்று வட்டார மக்களுக்கு நிறையவே இருந்தது. இந்நிலையில் திருச்சி காங்கிரஸ் எம்பி. திருநாவுக்கரசரின் முயற்சியால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லி, அபுதாபி, தோகா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருச்சியில் இருந்து மதுரை வழியாக டெல்லிக்கு தினசரி விமானசேவை தொடங்கப்படுகிறது. அதேபோல திருச்சியில் இருந்து அபுதாபிக்கு திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் புதிய விமானங்கள் இனி பறக்கும். வாரம் தோறும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் திருச்சியில் இருந்து கத்தார் நாட்டின் தோகாவுக்கு விமானச் சேவை தொடங்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் இந்தப் புதிய விமான சேவைகள் தொடங்கப்படும் என்று திருச்சி எம்.பி.யும் திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவருமான திருநாவுக்கரசர் இன்று தெரிவித்துள்ளார். மத்திய விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் பூரியை தொடர்ந்து வலியுறுத்தி இந்த விமான சேவைகளை பெற்று வந்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

இதனால் திருச்சி சுற்றுவட்டாரத்தினர் இனி நேரடியாக திருச்சியில் இருந்தே டெல்லி செல்ல முடியும். மேலும் அபுதாபி மற்றும் கத்தாருக்கு செல்லும் நாகை, திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், மாவட்ட இளைஞர்கள்-தொழிலாளர்கள் இனி சென்னை சென்றுதான் விமானம் ஏறவேண்டும் என்று இல்லாமல் திருச்சியில் இருந்தே செல்லலாம்.

-வேந்தன்

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon