மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

மாணவரின் கடிதத்தால் நெகிழ்ந்த ஆட்சியர்!

மாணவரின் கடிதத்தால் நெகிழ்ந்த ஆட்சியர்!

பேருந்து வசதி ஏற்படுத்தித் தர உத்தரவிட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து மூன்றாம் வகுப்பு மாணவர், எழுதிய கடிதம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் உரியப் பேருந்து மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இதற்குத் திருப்பூர் சிக்கினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களும் விதிவிலக்கல்ல. அந்த பகுதி மாணவர்கள் உரியப் பேருந்து மற்றும் சாலை வசதி இல்லாததால் கடும் சிரமத்துக்கு மத்தியில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேருந்து வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து சிக்கினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 3ஆம் வகுப்பு மாணவர் ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்….

அன்புள்ள ஆட்சியர் அவர்களுக்கு, நானும் எனது நண்பர்களும் பள்ளிக்கு நடந்துதான் செல்வோம். என் வீட்டிலிருந்து பள்ளி செல்வதற்கான தூரம் 10.5 கிமீ என்பதால் நடந்து செல்வதற்குக் கஷ்டமாக இருக்கும். மழைக் காலங்களில் நாங்கள் செல்லும் ஓடைகளில் தண்ணீர் போகும். அந்த ஓடையைத் தாண்டிதான் செல்வோம். எங்கள் பகுதி அண்ணன்கள் சமூக வலைதளங்களில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். உங்கள் உத்தரவின் பேரில் தாராபுரம் பனிமனை மேலாளர் இன்னும் 10 தினங்களில் பேருந்து வசதி கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார். இது என்னையும் எனது நண்பர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்களுக்கு நேரம் இருந்தால் நீங்கள் வந்து பேருந்து இயக்கத்தைத் தொடங்கி வைக்க வேண்டும். உங்களை நேரில் காண ஆவலுடன் இருக்கிறோம். இப்படிக்கு தரணேஷ் மற்றும் நண்பர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

மாணவனின் கடிதத்தால் நெகிழ்ச்சியடைந்த ஆட்சியர், இதனைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சிக்கினாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் தரணேஷ் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த கடிதம் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

-கவிபிரியா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon