மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

கொரோனா: இந்திய விமானத்தை அனுமதிக்க சீனா தாமதம்!

கொரோனா: இந்திய விமானத்தை அனுமதிக்க சீனா தாமதம்!

சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்ட நிலையில், சீனாவுக்கு நிவாரணப்பொருட்களைக் கொண்டு செல்லத் தயாராக இருக்கும் இந்திய விமானத்துக்கு சீனா அனுமதி அளிப்பதில் தாமதித்து வருகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லவும், பெருமளவு பாதிக்கப்பட்ட வுஹான் நகரில் மீதமிருக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வரவும் இந்திய விமானப்படை விமானத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான வுஹானுக்கு சி -17 வகை ராணுவ போக்குவரத்து விமானத்தை இந்தியா பிப்ரவரி 20 அன்று அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டது, ஆனால் சீனாவில் இருந்து விமானத்திற்கு அனுமதி வழங்கப்படாததால் விமானத்தை எடுக்க முடியவில்லை. "விமானத்திற்கான அனுமதி வழங்க சீனா வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது” என்று இந்திய உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி, எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்வதில் சீனாவின் மக்களுக்கும் சீன அரசாங்கத்திற்கும் இந்தியாவின் ஒற்றுமையை தெரிவித்ததோடு, நாட்டிற்கு உதவி வழங்க முன்வந்தார்.

இதைத் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை விமானம் மூலமாக அனுப்ப இந்தியா முடிவெடுத்தது. கையுறைகள், அறுவைசிகிச்சை முகமூடிகள் என ஏராளமான பொருட்கள் சீனா செல்ல காத்திருக்கின்றன.

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon