மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

தூத்துக்குடி விசாரணை: விலக்கு கேட்கும் ரஜினி

தூத்துக்குடி விசாரணை: விலக்கு கேட்கும் ரஜினி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து நடிகர் ரஜினி விலக்கு கேட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் அதே ஆண்டு மே 22 ஆம் தேதி உச்சக் கட்டத்தை எட்டியது. இந்த போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி 25ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையத்தில் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர், துப்பாக்கிச் சூடு குறித்து விமர்சனம் செய்த ரஜினியையும் விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக ரஜினி அளித்த பேட்டியினை ஆராய்ந்து பரிசீலனை செய்து அவரை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, விசாரணைக்கு நேரில் ஆஜராக ரஜினிக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. அதில், “பிப்ரவரி 25ஆம் தேதி காலை 10 மணிக்குத் தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக உங்களுக்குத் தெரிந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

விசாரணைக்கு ஆஜராக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு விசாரணை ஆணையத்தில் ரஜினி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கேள்விகளை எழுத்துப்பூர்வமாகத் தந்தால் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்ற ரஜினி, நிருபர்களிடம் , "போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர். மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் போலீசாரை குற்றம் சாட்டுவது தவறு” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

-கவிபிரியா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon