மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

இளைஞரைக் கட்டையால் தாக்கிய எஸ்.ஐ: டிஜிபிக்கு நோட்டீஸ்!

இளைஞரைக் கட்டையால் தாக்கிய எஸ்.ஐ: டிஜிபிக்கு நோட்டீஸ்!

சென்னையில் ஹெல்மெட் அணியாத இளைஞரைப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கட்டையால் தாக்கிய விவகாரம் தொடர்பாக டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 19ஆம் தேதி சென்னை ஓட்டேரி அருகே புளியந்தோப்பு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இஎஸ்ஐ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுரேந்தரை ஹெல்மெட் அணியாததால் மடக்கிப் பிடித்துள்ளார். ஹெல்மெட் அணியாததால் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆய்வாளர் ரமேஷ், சுரேந்திரன் தலையில் கட்டையால் தாக்கியிருக்கிறார். இதனால் சுரேந்தரருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் அங்குப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஓட்டேரி காவல்நிலைய ஆய்வாளர் வள்ளி சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் நபர், “ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கலாம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் கட்டையால் தாக்குவதற்கு என்ன உரிமை உள்ளது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வீடியோ ட்விட்டரில் அதிகளவு பகிரப்பட்டது. இச்சம்பவம் மாநில மனித உரிமை ஆணையம் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இன்று சில கேள்விகளை எழுப்பி தமிழக டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒருவரைத் தாக்கியது மனித உரிமை மீறல் இல்லையா? சிறப்பு உதவி ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கூடுதல் போக்குவரத்து ஆணையர் அருணும் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon