மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

அரிசிக்குப் பதிலாகப் பணம்: உத்தரவை உறுதிசெய்த நீதிமன்றம்!

அரிசிக்குப் பதிலாகப் பணம்: உத்தரவை உறுதிசெய்த நீதிமன்றம்!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று(பிப்ரவரி 21) தீர்ப்பு வழங்கியது.

ஏழை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 20 கிலோ அரிசியை இலவசமாகப் புதுச்சேரி அரசு வழங்கி வருகிறது. ஆனால் தரமற்ற அரிசி வழங்குவதாகவும். எடை குறைவான அரிசி வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இலவச அரிசிக்குப் பதில், அதற்குரிய பணத்தை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் , துணைநிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று கிரண்பேடியைச் சந்தித்து, அரிசி வழங்குவதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுள்ளனர். இதனை ஆளுநர் நிராகரித்துவிட்டார்.

இதுகுறித்து கிரண்பேடி கூறுகையில், மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு நான் தடையாக இல்லை. ஆனால் மக்கள் தரமான அரிசியை உண்ண வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலவச அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக முதல்வர் நாராயண சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அப்போது அரிசிக்குரிய பணம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கிரண்பேடி தரப்பிலும் மத்திய அரசுத் தரப்பிலும் வாதிடப்பட்டு வந்தது. முதல்வர் சார்பில், பணம் கொடுக்கப்பட்டால் அதனை குடும்ப ஆண்கள் மது குடிக்கச் செலவழித்துவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “ அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்கக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி அரசுக்குப் பணம் வழங்க அனுமதி வழங்கியது. அதை மீறி புதுச்சேரி அரசு செயல்பட முடியாது. எனவே முதல்வர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆளுநர் கிரண் பேடி பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கவிபிரியா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon