மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

கிண்டல், நக்கல்: உலகை உலுக்கிய சிறுவன்!

கிண்டல், நக்கல்: உலகை உலுக்கிய சிறுவன்!

ஒருவரின் குறையைக் கிண்டலும் கேலியும் செய்தால் அது அவர்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த குழந்தை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்றளவும் பலர் கிண்டலையும் கேலியையும் எதிர்கொண்டுதான் இருக்கின்றனர். இது அவர்களுக்குத் தற்கொலை எண்ணத்துக்கு வித்திடுகிறது என்பதை யாரும் உணர்வதில்லை. அந்த வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வளர்ச்சி குறைந்த குழந்தை, கிண்டலுக்கு உள்ளாகி தனது தாயிடம் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி அழும் வீடியோ இணையவாசிகளை கண் கலங்க வைக்கிறது.

ஒன்பது வயதுடைய ஒரு குழந்தை தினம் தினம் அழுதுகொண்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறும்போது, அந்த தாயின் மனவோட்டம் என்னவாக இருக்கும் என்பதை நமக்கு வெளிக்காட்டியிருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த தாய்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் உள்ள பள்ளியில் சிறுவன் குவாடன்(9) படித்து வருகிறார். பிறப்பிலேயே Achondroplasia எனப்படும் உயர வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குவாடன் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார்.

இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த குவாடன், ஒரு நாள் தனது தாயிடம் ஒரு கயிறோ, கத்தியோ என்னிடம் கொடுங்கள், நான் சாக விரும்புகிறேன் எனக்கூறி அழுது தனது கோபத்தையும் வருத்தத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகிறார்.

”நான் சாக வேண்டும், யாராவது என்னை கொன்று விடுங்கள் எனவும், கத்தியை கொண்டு தான் எனது இதயத்தில் குத்திகொள்ள போகிறேன்” என்று கூறி அழுகிறார். இதுகுறித்த வீடியோவைத்தான் குவாடனின் தாய் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் அந்த குழந்தையின் அம்மா, ”உங்கள் கேலியும் கிண்டலும் இதைத்தான் செய்கிறது, நன்றாக பாருங்கள், தற்கொலை எண்ணத்தில் ஒரு குழந்தையை வைத்துகொண்டு ஒவ்வொரு நொடியும் பயத்தில் இருக்கிறேன். பள்ளியில், பொது இடங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்த கொடுமையால் நாங்கள் நொந்து போய் இருக்கிறோம்” என்று வருத்தத்துடன் பேசுகிறார்.

”கடந்த புதன்கிழமை குவாடனை பள்ளியிலிருந்து அழைத்து வரசென்றபோது, ஒரு மாணவர் அவனது தலையில் தட்டி உயரத்தை கேலி செய்து கொண்டிருந்தான், என்னை பார்த்த குவாடன், அங்கு நடப்பதை தான் பார்க்க கூடாது என மிக வேகமாக ஒடிவந்து காரில் ஏறி கொண்டான்” என்றும் அந்த வீடியோவில் கூறுகிறார்.

இந்நிலையில் இவர் பதிவிட்ட வீடியோ பலமுறை பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் பல எண்ணங்களை பிரதிபலிக்கும் கமெண்டுகளையும் பெற்று வருகிறது.

’உன்னை கிண்டல் செய்பவர்களை விட நீ மிகச்சிறந்தவன்’ எனவும் இந்த குழந்தை இதுபோன்ற கொடுமைகளை அனுபவிக்க வேண்டியுள்ளதே எனவும், இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் குழந்தைகள் குறித்த அனுபவங்களையும் கருத்துகளாக பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இது குறித்து குவாடனின் தாயார், ”உலகின் பல பகுதிகளிலிருந்தும் குறுஞ்செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை. ஆனால் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

-பவித்ரா குமரேசன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon