மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

10,330 பேருக்கு வேலைவாய்ப்பு: புதிய திட்டங்களை தொடங்கிய முதல்வர்!

10,330 பேருக்கு வேலைவாய்ப்பு: புதிய திட்டங்களை தொடங்கிய முதல்வர்!

ரூ.1,254 கோடி முதலீட்டில் 10,330 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கக் கூடிய தொழில் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 21) தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தொழில் தொடங்க ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்து பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் அறிந்துகொள்ளும் நிகழ்ச்சி இன்று காலை கிண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அப்போது ரூ.1,254 கோடி முதலீட்டில் 10,330 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க கூடிய தொழில் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரிய நாட்டைச் சேர்ந்த ஹெனான், ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், “உலகெங்கும் உள்ள தொழில் முனைவோரை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்க்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்கள் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள உறுதியளித்துள்ளன. இவற்றில், 59 நிறுவனங்கள் ஏற்கனவே வணிக உற்பத்தியை துவங்கிவிட்டன. மேலும் 219 நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

இந்தியாவில் மிகப்பெரிய கழிவுநீரை நன்னீராக்கும் ஆலைகள், கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மழைநீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெறும் வகையிலான பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், ”எனது தலைமையிலான உயர்மட்ட குழுவினர், அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்றதன் பயனாக 8,835 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் பல திட்டங்கள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இன்று தொடங்கி வைத்த ஜோஹோ ஹெல்த் நிறுவனம் உறுதியளித்த முதலீட்டை விட 16 மடங்கு அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது. கொரியாவின் ஹெனான் மற்றும் ஜப்பானின் மிட்சுபா சைகால் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை இங்கு அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழிற் சூழலுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இப்பூங்கா 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.

-கவிபிரியா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon