மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

வந்துவிட்டது ஐஸ்க்ரீம் தோசை! புது உணவு உத்தி!

வந்துவிட்டது   ஐஸ்க்ரீம் தோசை!  புது உணவு உத்தி!

பொடி தோசை சாப்பிட்டிருப்பீங்க, பூண்டு தோசை சாப்பிட்டிருப்பீங்க, முடக்கத்தான் தோசை சாப்பிட்டிருப்பீங்க.... ஏன் முட்டை தோசை கூட சாப்ட்ருப்பீங்க. ஐஸ்க்ரீம் தோசை சாப்பிட்ருக்கீங்களா... சாப்பிட்ருக்கீங்களா?

-சிங்கம் சூர்யா போல இப்படி கேட்க வைத்துவிட்டார்கள் பெங்களூருவாலாக்கள்.

இதை இதோடுதான் சேர்க்க வேண்டும் என்ற வரம்புகளையெல்லாம் உடைத்து புதிய சேர்க்கைகளை உருவாக்கும் உத்தி சமையல் துறையிலும் வந்துவிட்டதன் அடையாளம்தான் ஐஸ்க்ரீம் தோசை.

பெங்களூருவில் ஒரு சாலையோரை தோசைக் கடைக்காரர்தான் இந்த ஐஸ்க்ரீம் தோசையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அங்கே வந்து பலர் சாப்பிட்டு ஐஸ்க்ரீம் தோசையை ருசித்து சாப்பிட்டுப் போக, நியூஸ் மினிட் இணைய தளத்தால் மகேந்திரா குரூப்ஸ் தலைவர் ஆனந்த் மகேந்திரா வரை விவாதிக்கும் பொருளாகிவிட்டது ஐஸ்க்ரீம் தோசை.

பெங்களூரு ஜெய்நகரில் 2ஆவது பிளாக் சாலையில், சாலையோர டிபன் கடை வைத்திருப்பவர் மஞ்சு நாத். தோசை, இட்லிக்கு சட்னி, சாம்பார், பொடி என்று விற்பனை செய்துகொண்டிருந்த மஞ்சு நாத்திடம் ஒரு குழந்தை வந்து, ‘அங்கிள்... ஐஸ்க்ரீம் தோசை இருக்கா?’ என்று கேட்டிருக்கிறாள். ‘தோசையில யாராச்சும் ஐஸ்க்ரீமை போடுவாங்களா?’ என்று அவளது பெற்றோர் அந்த குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.

ஆனால், மஞ்சுநாத்துக்கு அந்த குழந்தையின் கேள்வி காதுக்குள்ளும் மனதுக்குள்ளும் ஒலித்துக் கொண்டே இருந்தது. பொடி தோசை என்றால் தோசை மீது பொடியை வேய்கிறோம், முட்டை தோசை என்றால் தோசையின் மீது முட்டையை உடைத்து ஊற்றுகிறோம்... அதுபோல ஏன் தோசை மீது ஐஸ்க்ரீமை ஊற்றி வார்க்கக் கூடாது என்று யோசித்திருக்கிறார். ஐஸ்க்ரீம் தோசை போலவே இட்லி மீதும் ஐஸ்க்ரீமை ஊற்றி புதிது பண்ணியிருக்கிறார்.

இப்போது மஞ்சுநாத் சேட் என்ற அந்த கடை புகழ்பெற்றுவிட்டது. குழந்தைகள், இளம் பெண்கள், இளைஞர்கள் பலரும் ஐஸ்க்ரீம் தோசைக்கு ரசிகர்களாகிவிட்டனர். அதுவும் கோடை ஆரம்பிப்பதால், இந்த ஐஸ்க்ரீம் தோசைக்கு இன்னும் மவுசு ஏறிக் கொண்டிருக்கிறது.

மகேந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மகேந்திரா இதுபற்றி தனது ட்விட்டரில், “சாலையோரைக் கடைக்கார்களின் கண்டுபிடிப்புத் திறன் மிகவும் அற்புதமானது. நான் இவரது புதுமையைத் தேடும் முயற்சிக்கு முழு மதிப்பெண்கள் அளிக்கிறேன். எங்கள் குழுமத்தின் வடிவமைப்பாளர்கள் இவரைப் போன்ற விற்பனையாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சிலாகித்திருக்கிறார்.

இன்னும் சிலரோ, “தோசையில் இதையெல்லாமா சேர்ப்பார்கள். தோசைக்கே இது அநீதி” என்று அந்த குழந்தையின் பெற்றோரைப் போல பொங்கித் தீர்க்கிறார்கள் ட்விட்டரில்.

இதோடு இதுதான் சேர வேண்டும் என்ற பழமை விரும்பிகளுக்கு ஐஸ்க்ரீம் தோசை சுடுகிறது. புதிய தேடலில் புதிய ருசிகளைக் காண்பவர்களுக்கு ஐஸ்க்ரீம் தோசை பிடிக்கிறது.

-வேந்தன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon