மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

குரூப் 2ஏ முறைகேடு: புகாருக்காக காத்திருக்கும் சிபிசிஐடி!

குரூப் 2ஏ முறைகேடு: புகாருக்காக காத்திருக்கும் சிபிசிஐடி!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்த பட்டியலை அனுப்பி வைத்தும் இன்னும் டிஎன்பிஎஸ்சி அதுகுறித்து புகாரளிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, குரூப் 1, குரூப் 2ஏ என முந்தைய காலங்களில் நடந்த அரசு பணியாளர்கள் தேர்விலும், சீருடை பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமாரைக் காவலில் எடுத்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2016 இல் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதோடு 2016ல் முறைகேடு நடந்ததற்கான ஒரு பட்டியலையும் கொடுத்துள்ளார் ஜெயக்குமார்.

இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான பட்டியலை சிபிசிஐடி டிஎன்பிஎஸ்சிக்கு அனுப்பி தேர்வர்கள் தொடர்பான விவரங்களைக் கேட்டுள்ளனர். ஆனால் தற்போது வரை அதன் விவரங்கள் சிபிசிஐடிக்கு கொடுக்கப்படவில்லை, இதனால் புகாருக்காகக் காத்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தது முதல், இதுகுறித்து சிபிசிஐடியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது, முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், தேர்வர்கள் தேர்வாணையம் மீதான நம்பக தன்மையை இழக்க வேண்டாம் என்று கூறி வரும் டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ முறைகேடு பட்டியலை அனுப்பியும் அதுதொடர்பான விவரங்களைக் கொடுக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

-மின்னம்பலம் டீம்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon