மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

வரலாறு காணாத நெருக்கடி: மத்திய அமைச்சர்களை நாடும் ஏர்டெல், வோடஃபோன்!

வரலாறு காணாத நெருக்கடி: மத்திய அமைச்சர்களை நாடும் ஏர்டெல், வோடஃபோன்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் ஆகியவை ஏஜிஆர் எனப்படும் வரி பாக்கி பிரச்சினைக்காக மத்திய அரசோடு போராடிக்கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம், “வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டிய ஏஜிஆர் எனப்படும் வரி பாக்கியைச் செலுத்தியே தீர வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் மீண்டும் பல்வேறு கோரிக்கைகளுடன் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர். பிப்ரவரி 19ஆம் தேதி வோடஃபோன் ஐடியா தலைவர் குமாரமங்கலம் பிர்லாவும் ஏர்டெல் அதிபர் சுனில் மிட்டலும் சேர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர்.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 20) ஏர்டெல் குழுமத்தின் தலைவர் சுனில் மிட்டல் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத்தைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது வரலாறு காணாத அளவுக்கு ஏஜிஆர் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நிலுவைத் தொகையை விரைவில் செலுத்திவிடுவதாகவும் மத்திய அமைச்சரிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏர்டெல் தலைவர் மிட்டல், “இந்தியத் தொலைத் தொடர்புத் துறை கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. இதுபற்றிய பொதுவான விவரங்களை மத்திய அமைச்சரிடம் எடுத்துக் கூறினேன். ஏஜிஆர் தொகை செலுத்த வேண்டும் என்று விதிக்கப்படும் நெருக்கடி வரலாறு காணாத நெருக்கடியாக இருக்கிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அழுத்தத்துக்கு அதிகமாகியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து ஏஜிஆர் தொகையை ஏர்டெல் அரசுக்குச் செலுத்த உறுதிபூண்டுள்ளது. எனினும் தொலைத் தொடர்புத் துறையைக் காப்பாற்ற வரிக்குறைப்பு உள்ளிட்ட சில சலுகைகளை அளிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்று கூறினார் சுனில் மிட்டல்.

ஏஜிஆர் என்றால் என்ன?

இந்தியாவில் செயல்படும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு வரும் வருமானத்தின் அடிப்படையில் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய வரிகளைக் கணக்கிடும் அடிப்படையே ஏஜிஆர் என்று அழைக்கப்படுகிறது. Adjusterd Gross Revnue எனப்படும் இந்த ஏஜிஆர் கணக்கிடும் முறை பற்றி 14 வருடங்களாகத் தொலைத் தொடர்புத் துறைக்கும் அரசுக்கும் பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. .

இந்தச் சட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து மூன்று மாதங்களுக்குள் ரூ.92,000 கோடிக்கு மேல் வசூலிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. வோடஃபோன் இந்தியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இரு தற்போதைய ஆபரேட்டர்களுக்கு இந்த உத்தரவு ஒரு பெரிய இடியாக விழுந்தது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘மார்ச் 17க்குள் கட்டணங்களைச் செலுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பையும் சந்திக்க நேரிடும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏர்டெல் நிறுவனத்துக்கு மதிப்பிடப்பட்ட 35,000 கோடி ரூபாயில் 10,000 கோடி ரூபாயை இந்த வாரம் மத்திய அரசுக்கு செலுத்தியிருக்கும் நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனமோ பணத்தைச் செலுத்தும் ஐடியாவில் இல்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில்தான் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்க இவ்விரு நிறுவனங்களின் தலைவர்களும் மத்திய நிதியமைச்சர், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து வருகிறார்கள்.

-வேந்தன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon