மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

தற்கொலை முயற்சி: நிர்பயா வழக்கில் புதிய சிக்கல்!

தற்கொலை முயற்சி: நிர்பயா வழக்கில் புதிய சிக்கல்!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தற்கொலைக்கு முயன்றதாகவும் அதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் திகார் சிறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள், தூக்குத் தண்டனையைத் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி விசாரணை நீதிமன்றம், குற்றவாளிகளை வரும் மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிட வேண்டும் என்று டெத் வாரண்ட் பிறப்பித்தது.

ஏற்கனவே இரண்டு முறை தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது தாமதமான நிலையில் தற்போது மூன்றாவது முறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திகார் சிறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிர்பயா கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா பிப்ரவரி 16ஆம் தேதி அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் உள்ள சுவரில் தலையை வேகமாக மோதிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிறை நிர்வாகத்தால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் கைதிகளுக்கு உடலில் காயம் இருக்கக் கூடாது என்று சட்ட விதிகள் உள்ளதால், நீதிமன்றம் அறிவித்தபடி நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும் 3ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அதே நேரத்தில் வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளார். அதில் வினய் சர்மா மனநோய் மற்றும் உடல் ரீதியாகப் பாதிப்படைந்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவரது தாயைக்கூட அடையாளம் காண முடியாத நிலையில் வினய் சர்மா இருப்பதாகவும் இதற்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்மேந்திர ரணா, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-கவிபிரியா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon