மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஷாஹின் பாக் பேச்சுவார்த்தை: மீடியாக்கள் வெளியேற்றம்!

ஷாஹின் பாக் பேச்சுவார்த்தை: மீடியாக்கள் வெளியேற்றம்!

ஷாஹின் பாக் போராட்டத்திலிருந்து, மீடியாக்கள் வெளியேற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் குழு இன்று தெரிவித்துள்ளது.

சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது, கடந்த 60 நாட்களாக இந்த போராட்டத்தைப் பெண்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தைக் கலைக்க பாஜக முயன்று வருகிறது. இதனிடையே இந்த போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்தது.

மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாத்னா ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாத்னா ராமச்சந்திரன் ஆகியோர் ஷாஹின் பாக் போராட்டக் களத்துக்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மத்தியஸ்தர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான உரையாடலைப் பதிவு செய்ய மீடியாக்கள் தயாராகின.

ஷாஹின் பாக் போராட்டக் களத்திலிருந்த பெண் ஒருவர் அனைவரது முன்னிலையிலும், குறிப்பாக ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்,

அப்போது மூத்த வழக்கறிஞர் சாத்னா ராமச்சந்திரன், “நீங்கள் வேண்டுமானால் ஊடகங்கள் முன்பு பேசுங்கள். எங்களால் பேச முடியாது.எங்களுக்கு 4 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன்பின் வேறு வழியில் பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார். இதன்பின் போராட்ட களத்திலிருந்து வெளியேற மத்தியஸ்தர்கள் மீடியாக்களை கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை சஞ்சய் ஹெக்டே போராட்டக்காரர்களுக்கு மத்தியில் வாசித்தார். முதல் நாள் முடிவடைந்த நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரவுள்ளது.

-கவிபிரியா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon