மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிசிஐடிக்கு நெருக்கடி!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிசிஐடிக்கு  நெருக்கடி!

குரூப் 1, குரூப்2ஏ, குரூப் 4, தேர்வுகளில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். இதில் முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தன் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 19) இருவருக்குமான காவலை மேலும் 6 நாட்கள் நீட்டித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து சிபிசிஐடி போலீசாருக்கு விசாரணைக்குத் தடை போடப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் விசாரணை செய்வதையும், கைது செய்வதையும் தற்காலிகமாக நிறுத்துமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அலுவலக வட்டாரத்தில் பேசுகிறார்கள்.

இதுகுறித்து நாம் விசாரித்ததில், முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமாரைக் கைது செய்ய முடியாமல் தவித்த சிபிசிஐடி போலீசார், நெருக்கடி கொடுத்து சரண்டராக வைத்தனர். போலீஸ் கஸ்டடியில் எடுத்த ஜெயக்குமாரை தீவிரமாக விசாரிக்காத அளவுக்கு, சட்டம் படித்தவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஜெயக்குமாருக்குத் தெம்பு கொடுத்து வருகின்றனர். அவர்களின் ஆலோசனைப்படிதான் ஐயப்பன் என்ற புரோக்கரை ஜெயக்குமார் வாக்குமூலத்தில் முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு தான் ஐயப்பனும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவுவும் இணைந்த புகைப்படத்துடன் செய்திகள் பரவியது. இருந்தாலும் விசாரணை ஜெயக்குமாரையே சுற்றிச் சுற்றி வருவதால் ஆளும் கட்சியினர் விசாரணையை ஜெயக்குமாருடன் முடித்துவிடுங்கள் என்று நெருக்கடி கொடுத்து வருவதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயக்குமார் இடைத்தரகர்தான், இவருக்கு மேல் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அல்லது டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் செய்தவர்களின் பங்களிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் ஆனால், இதுபோன்ற தடைகளால் அடுத்தகட்ட விசாரணையை நோக்கிச் செல்ல முடியாமல் சிபிசிஐடி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

-மின்னம்பலம் டீம்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon