மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

குண்டுமழையிலும் குளிர் சிரிப்பு!

குண்டுமழையிலும் குளிர் சிரிப்பு!

“துன்பம் வரும் வேளையிலும் சிரித்து மகிழுங்கள்” என்று வார்த்தையாகக் கூறிவிட முடியும். ஆனால் அதனை நடத்திக்காட்டுவது நிச்சயம் எளிதான ஒன்று அல்ல.

மரணம் வாசற்படியில் காத்திருக்கும் வேளையிலும் மகிழ்வதும், மகிழ வைப்பதும் எப்படி சாத்தியமாகும். என் மகளுக்காக, அவளது சந்தோஷத்திற்காக அதையும் சாத்தியப்படுத்துவேன் என நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சிரியா நாட்டை சேர்ந்த தந்தை ஒருவர்.

இரு தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் சிதற வைத்தது. அன்பு அப்பா ஒருவர் தனது பாச மகளுடன் இணைந்து விளையாடுவதான அந்த வீடியோவில் விளையாட்டைத் தாண்டிய ஒரு அசாதாரணம் மறைந்து இருந்தது. அந்த வீடியோவில் இருப்பது அப்துல்லாவும் அவரது நான்கு வயது மகளும். ஏதோ ஒரு சத்தம் கேட்க, அப்துல்லா தனது மகளிடம், ‘இது என்ன சத்தம் ஏரோபிளேனா இல்லை குண்டா(shell)?’ என்று மெதுவான குரலில் கேட்கிறார். அதற்கு அந்த சிறு குழந்தை அதே மெதுவான குரலில், ‘குண்டு தான்’ என்று பதில் கூறுகிறார். தொடர்ந்து, ‘அது கீழே விழும்போது நாம் சிரிக்கலாம் சரியா?’ என்று தனது மழலை மொழியில் அப்பாவியாகக் கேட்கிறார். திடீரென குண்டு விழும் சத்தம் கேட்க, பெரும் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்கிறார். இது உனக்கு வேடிக்கையாக இருக்கிறதா என்று சிரித்துக் கொண்டே அப்துல்லா கேட்க, ‘ஆமாம், ஆமாம் ரொம்ப வேடிக்கையாகத் தான் இருக்கிறது’ என்று கூறியவாறே மீண்டும் சிரிக்கத் தொடங்குகிறார்.

அவர்கள் கூறுவது போன்று உண்மையாகவே அது குண்டு சத்தம் என்பது தான் அவர்கள் மகிழும்போதும் நம்மை வேதனை அடையச் செய்யும் விஷயம். சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது சாராகுவில் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் அப்துல்லா வசித்துவருகிறார். சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே நடந்துவரும் வான்வெளித் தாக்குதலுக்கு மத்தியில் தனது மகளை மகிழ வைக்கும் அப்துல்லாவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து அப்துல்லா கூறும்போது, “இந்த யோசனை எனக்கு ஈத் நாட்டில் இருந்து கிடைத்தது. சுற்றிலும் தீ பற்றி எரியும் போதும் சில சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்தேன். அதில் இருந்து தான் எனக்கு இந்த யோசனை தோன்றியது. முதலில் வெடிகுண்டு சத்தம் கேட்ட போது எனது மகள் பெரிதும் பயந்துவிட்டாள். நான் அவளை பால்கணிக்கு அழைத்துச் சென்று, ‘இதில் பயப்பட ஒன்றுமில்லை. சில சிறுவர்கள் விளையாடுகிறார்கள். அதன் சத்தம் தான்’ என்று கூறினேன். அதில் இருந்து நாமும் அந்த சத்தத்தை வைத்து விளையாடுவோம் என்றேன். அவளும் சரி என்றாள். சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள். குண்டு வெடிக்கும் சத்தம் மீண்டும் அவளை பயமுறுத்தியது. நான், ‘பயப்படாதே, இது சிறுவர்கள் விளையாடும் சத்தம் தான்’ என்று கூறினேன். பின்னர் தான் அந்த சத்தத்தை வைத்து விளையாட ஆரம்பித்தோம்” என்று கூறுகிறார்.

அப்துல்லா தனது மனைவி மற்றும் மகளுடன் அங்கு வசித்துவருகிறார். வெடிகுண்டு தாக்குதலின் அடையாளங்களையும் இழப்புகளையும் தாங்கி நிற்கும் வசிப்பிடம் ஒருவித அழுத்தத்தை அவர்களுக்குத் தந்துகொண்டே இருக்கிறது. எங்கே செல்வது என்றும் எப்படி வாழ்வது என்றும் தெரியாமல் நிர்கதியாய் நிற்கின்றார்கள். இந்த வன்முறையில் இருந்து நாங்கள் தப்பிப்பது சாத்தியமற்ற ஒன்று என்று அப்துல்லா கூறும்போது எல்லாவற்றிற்கும் தயாராக நிற்கிறேன் என்னும் திடம் அவரது வார்த்தைகளில் தெரிகிறது.

குண்டு மழைகளை நாங்கள் எதிர்கொள்வதும், வெடிகுண்டுகள் உயிர்களை அழிப்பதும் இங்கு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. கடந்த ஒன்பது வருடங்களாக தினமும் இதனை எதிர்கொள்ளும் எங்களுக்கு இந்த நிகழ்வுகள் தினசரி வாழ்க்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டது. ‘அப்புதுல்லா உங்களது மிகப்பெரிய ஆசை என்ன?’என்று கேட்கும் போது, ‘எனது மகளுக்கு அவளது குழந்தைப்பருவம் சரியாகக் கிடைக்க வேண்டும். மிகச் சாதாரண வாழ்க்கை அவளுக்குக் கிடைத்தால் போதும். எங்கள் மகள் எந்தவிதமாக அச்சமும் இன்றி வாழ்ந்தாலே போதும்’ என்று பதில் சொல்கிறார்.

எப்போது வேண்டுமானாலும் ஏதேனும் ஒரு குண்டு உயிரைக் குடிக்கலாம் என்று தெரிந்திருந்தும், தனது மகள்களை மகிழ்விக்கப் போராடும் பல அப்துல்லாக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பெயர் மாறலாம், நிறம் மாறலாம், நாடுகளும் மாறலாம். ஆனால் மனிதர்கள் மனிதராய் வாழலாம் தானே. வாழட்டுமே!

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon