மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

டிஎன்பிஎஸ்சி: ஜெயக்குமார் புகார் - நேரு பதில்!

டிஎன்பிஎஸ்சி: ஜெயக்குமார் புகார் - நேரு பதில்!

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு கே.என்.நேரு இன்று பதிலளித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இவ்விவகாரத்தைப் பொறுத்தவரை 2011 முதல் நடந்து வரும் அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்து வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே சமயத்தில் மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

அதோடு டிஎன்பிஎஸ்சி தேர்வில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பரிந்துரை கடிதம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ.க்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்துப் பேசியுள்ள கே.என்.நேரு, “திமுக காரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார். நான் அமைச்சராக இருந்து 10 வருடங்கள் ஆகிறது, அதுபோன்று செல்வராஜ் அமைச்சராக இருந்து 20 வருடங்கள் ஆகிறது. இதில் நாங்கள் எந்த விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, நாங்கள் துறை அமைச்சரும் இல்லை. இம்முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகதான் வழக்கு தொடர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “வேலைகேட்டு வந்தவர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் எப்படி நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஜெயக்குமார் டிஎன்பிஎஸ்சி ஊழல் புகாரிலிருந்து தப்பிக்கத் திமுக மீது பழிசுமத்துகிறார்” என்றும் குற்றம்சாட்டினார்.

-கவிபிரியா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon