மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

அமைச்சர் மீதான வழக்கை முடித்துவைக்க வேண்டும்: தமிழக அரசு!

அமைச்சர் மீதான வழக்கை முடித்துவைக்க வேண்டும்: தமிழக அரசு!

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமை செயலாளர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்குக் கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணையிலிருந்து வருகிறது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் மீதான லஞ்ச ஒழிப்பு துறையின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஜனவரி 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், விசாரணை அறிக்கையும், 200 சாட்சிகளின் வாக்குமூலமும் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில் இவ்வழக்கில் மனுதாரரின் பின்புலமும் அவர்களின் நோக்கமும் உண்மையிலேயே இது பொது நல வழக்குக்கு உகந்ததா என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் புதிய மனுவை இன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து, சிறப்புக் குழு அமைத்து விசாரித்ததாகவும், இந்த விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என்று தெரிய வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.. எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-கவிபிரியா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon