மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

தட்கல் ஊழல்: 100 கோடியை அமுக்கிய 60 பேர்!

தட்கல் ஊழல்: 100 கோடியை அமுக்கிய 60 பேர்!

ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்கில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறது ரயில்வே பாதுகாப்புப் படை(RPF). சாஃப்ட்வேர்கள் மூலமாக தட்கல் டிக்கெட்டுகளை முடக்கி வைத்து மற்றவர்களுக்கு விற்பனை செய்ததைக் கண்டுபிடித்திருப்பதாக RPF-இன் தலைமை இயக்குநர் அருண் குமார் கூறியிருக்கிறார். இந்த ஊழலில் ஈடுபட்ட 60 ஏஜெண்டுகளை கண்டுபிடித்து கைது செய்திருக்கின்றனர்.

ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்கும்போது ஏற்படும் சிரமங்களைவிட, அந்தப் பயணத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏற்படும் சிரமங்களே அதிகம். அப்படிப்பட்ட அத்தனை சிரமங்களையும் கடந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தான் இன்றைய சூப்பர்ஸ்டார்கள். ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகவும் சிரமமான ஒன்று என்றால் அது ‘captcha’ எனப்படும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை பதிவு செய்வதும், வங்கிக் கணக்கிலிருந்து வெற்றிகரமாக பணத்தை செலுத்துவதும் தான்.

captcha பதிவு செய்வது சாதாரண மனிதர்களுக்கு வெறும் 5 நொடி வேலை தான். ஆனால், அதில் 'Case Sensitivity' எனப்படும் பெரிய, சிறிய எழுத்துகளை மாற்றிப் பதிவு செய்துவிட்டால் மொத்த வேலையும் சொதப்பலாகிவிடும். அதேபோல, வங்கிக் கணக்கிலிருந்து டிக்கெட்டுக்கான பணப் பரிவர்த்தனை செய்வதற்காக வங்கிக் கணக்குத் தகவல்களைக் கொடுத்துவிட்டு OTP எனப்படும் One Time Passwordக்காக காத்திருக்கும் நேரம் அதிகபட்சம் மூன்று நிமிடம் வரை எடுத்துக்கொள்கிறது. ஆக, ஒரு முன்பதிவில் எடுக்கக்கூடிய ஐந்து டிக்கெட்டுகளை முழுவதுமாக முன்பதிவு செய்து முடிக்க குறைந்தபட்சமாக 4 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், ANMS, MAC, Jaguar ஆகிய சாஃப்ட்வேர்களின் மூலம் 1 நிமிடம் 48 நொடிகளுக்குள்ளாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்கின்றனர் ஏஜெண்டுகள். இந்த சாஃப்ட்வேர்களின் மூலம் மேலே குறிப்பிட்ட captcha மற்றும் OTP பதிவு செய்தல் ஆகிய வழிகளைப் பயன்படுத்தாமல் நேரடியாக டிக்கெட்டுகளை புக் செய்திருக்கின்றனர் ஏஜெண்டுகள். இதனை RPF கண்டுபிடித்து தடை செய்ததன் மூலம் டிக்கெட் புக்கிங்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பிகார் முதல் டெல்லி வரை இயங்கும் ஸ்வதந்த்ரதா எக்ஸ்பிரஸ் ரயிலின் தட்கல் டிக்கெட்டுகள், கடந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி ஐந்து நிமிடங்கள் வரை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், மேற்கண்ட சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தும் ஏஜெண்டுகளைக் கண்டுபிடித்து தடை செய்ததன் மூலம் இந்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தட்கல் டிக்கெட்டுகள் கிடைத்திருக்கின்றன. ஒரே ஒரு இடத்தில் கிடைத்த தகவல்களை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்பதால், பல ரயில்களின் தட்கல் டிக்கெட் முன்பதிவின் கால அளவுகளை வெவ்வேறு சமயங்களில் கணக்கெடுத்துப் பார்த்திருக்கிறது ரயில்வே நிர்வாகம். அதன்படி வெளியான தகவல்களே இந்தத் திருட்டுத்தனமான முன்பதிவின் மூலம் எப்படி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியவந்திருக்கிறது.

இஸ்லாம்பூரிலிருந்து, டெல்லி செல்லும் மகத் எக்ஸ்பிரஸ் ரயிலின் தட்கல் டிக்கெட் முன்பதிவு 2018 அக்டோபர் 26ஆம் தேதி 2 நிமிடங்களில் முடிந்திருக்கிறது. ஆனால், 2019 பிப்ரவரி 10ஆம் தேதி பத்து மணிநேரத்துக்கும் மேலாக தட்கல் டிக்கெட்டுகள் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றன. டெல்லி முதல் பாட்னா வரை இயங்கும் சம்பூர்ணா கிராந்தி எக்ஸ்பிரஸின் டிக்கெட்டுகள் நான்கு நிமிடத்தில் நவம்பர் 16, 2018-இல் முடிந்துவிட்டன. அதுவே, பிப்ரவரி 8ஆம் தேதி 18 நிமிடங்களுக்கும் மேலாக தட்கலில் இருந்திருக்கிறது.

மேற்கண்ட தகவல்களை வெளியிட்ட RPFஇன் தலைமை இயக்குநர் அருண் குமார் “பல பகுதிகளிலும் இப்படிப்பட்ட சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்திய ஏஜெண்டுகளை கைது செய்திருக்கிறோம். இதுபோல மேலும் பல சாஃப்ட்வேர்கள் பல மாநிலங்களில் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்திருக்கிறது. அவற்றைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் இயங்கும் ரயில்களின் டிக்கெட் முன்பதிவு கண்காணிக்கப்படுகிறது” என்று அறிவித்தார்.

-சிவா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon