மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

15 ஆவணங்கள்: ஆனாலும் குடியுரிமை மறுப்பு!

15 ஆவணங்கள்: ஆனாலும் குடியுரிமை மறுப்பு!

சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கவுகாத்தி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை நேற்று வழங்கியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை ஒரு நபரின் குடியுரிமைக்கான உறுதியான சான்றாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் அம்மாநிலத்தைச் சேர்ந்த 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இந்த 19 லட்சம் பேரின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவர்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை உறுதி செய்ய வங்கதேசத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.

என்.ஆர்.சி பட்டியலில் விடுவிக்கப்பட்ட 19 லட்சம் பேர் தீர்ப்பாயத்தை அணுகலாம். தீர்ப்பாயம் அவர்களை நிராகரித்தால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்குச் சட்ட வாய்ப்புகள் இருக்கும் வரை அகதிகளாகக் கருதப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டு, வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட அசாமைச் சேர்ந்த ஜபீதா பேகம் தன்னையும், தனது குடும்பத்தினரையும் இந்தியக் குடிமக்கள் என்று நிரூபிப்பதற்காக கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மனோஜித் புயான் மற்றும் பார்திவ்ஜோதி சைகியா, 2016ல் பிறப்பித்த ஒரு உத்தரவை மேற்கோள் காட்டினர். அதில், குடியுரிமையை நிரூபிப்பதற்கு பான் கார்டு, வங்கி தொடர்பான ஆவணங்கள், நில ஆவணங்கள், ரேஷன் கார்டு, கிராமத் தலைவர்களால் வழங்கப்படும் சான்றிதழ், நிரந்தர வாழ்விட சான்றிதழ், திருமண சான்றிதழ் என 15ஆவணங்களைச் சான்றாக எடுத்து கொள்ள முடியாது என்ற உத்தரவைச் சுட்டிக்காட்டினர்.

’ஜபீதா, தனது தந்தை ஜாபேத் அலியின் 1966, 1970, 1971 வாக்காளர் பட்டியல்கள் உட்பட 15 ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தார் இவற்றை ஜபீதாவின் ஊர்த் தலைவர் அளித்திருக்கிறார். ஆனால் தனது பெற்றோருக்கும் தனக்கும் உள்ள உறவை நிரூபிக்கும் ஆவணங்கள் ஜபீதாவிடம் இல்லை. இதனைக் காரணம் காட்டி அவர் இந்தியக் குடிமகன் இல்லை’ என்ற முடிவுக்கு வந்ததாகத் தீர்ப்பாயம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அப்போது இதே உத்தரவை 2016ல் பிறப்பித்ததாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்தான் என்று நிரூபிப்பதற்கான ஜபீதா பேகத்தின் சட்ட போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் அவருக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஜபீதாவால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் அளவுக்கு ஜபீதாவுக்கு பண வசதியில்லை, அசாமின் கவுகாத்தியிலிருந்து 100 கி.மீ தொலைவில் பஸ்கா பகுதியில் ஜபீதா வசித்து வருகிறார். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனால் ஜபீதா மட்டுமே தனது குடும்பத்துக்கு ஒரே வருமான ஆதாரம். இவருக்கு மூன்று மகள்கள். ஒருவர் இறந்துவிட்ட நிலையில் மற்றொரு மகள் காணாமல் போனார். 5ஆம் வகுப்பு படிக்கும் தனது இளைய மகளுக்காகவும், கணவருக்காகவும் தினசரி ரூ.150 கூலிக்கு வேலைக்குச் சென்று வருகிறார். இதன் மூலம் தனக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். ஜபீதா மட்டுமின்றி குடியுரிமை மறுக்கப்பட்ட 19 லட்சம் பேரில் பெரும்பாலானோர் இதே நிலையில் தான் இருக்கின்றனர்.

-கவிபிரியா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon