மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

சட்டமன்ற முற்றுகை: போலீஸ்- போராட்டக் காரர்கள் வியூகங்கள்!

சட்டமன்ற முற்றுகை: போலீஸ்- போராட்டக் காரர்கள் வியூகங்கள்!

குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்.ஆர்.சி ஆகியவற்றைக் கண்டித்தும் திரும்பப் பெறக் கோரியும் தமிழக இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்த சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் இன்று (பிப்ரவரி 19) நடக்கிறது.

இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட, திட்டமிட்டப்படி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடக்கும் என்று இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவே அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு தடை கேட்டு இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவரும், பத்திரிகையாளருமான வாராகி தாக்கல் செய்த மனு மீது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ரபுமனோகர், தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், மாநில அரசு பிளீடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், சிறப்பு அரசு பிளீடர் விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதாடும்போது, ‘ஏற்கனவே சென்னை மாநகர காவல்துறை சட்டத்தின்படி சென்னையில் எந்தவொரு போராட்டங்களும் கடந்த 13-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடத்தக்கூடாது என கமிஷனரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால், ஐந்து நாட்களுக்கு முன்பாக போலீசாரிடம் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேணடும். ஆனால் 19 ஆம் தேதி போராட்டத்தை வைத்துவிட்டு 17 ஆம் தேதிதான் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளார்கள்”என்றார்.

இதையடுத்து நீதிமன்றம், “யாரும் சட்டத்தை கையில் எடுத்து செயல்படக்கூடாது. எனவே வருகிற மார்ச் 11-ந் தேதி வரை சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இடைக்கால தடை விதிக்கிறோம். அதேநேரம், தடையை மீறி போராட்டம் நடத்தினால் போலீசார் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்”என்று உத்தரவிட்டது.

இஸ்லாமியக் கூட்டமைப்பு, மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் கூறுகையில், “தேசியக் கொடி ஏந்தி, வரம்பு மீறாத வகையிலும், அமைதியான முறையிலும் திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும். எதிர் மனுதாரராகச் சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றத்தின் தடை எங்களுக்குப் பொருந்தாது என்று தெரிவித்து போராட்டத்துக்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பாக அனைத்து பள்ளிவாசல்களின் உலமாக்கள், பெண்கள், குழந்தைகள், மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

பொதுவாகவே இதுபோன்ற போராட்டங்களில் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இரவே முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த போராட்டத்தில் முன்னெச்சரிக்கை கைது என்ற நடவடிக்கையை போலீஸ் கையாளவில்லை. இன்று காலை வரை போராட்டக் காரர்களுடன் போலீஸார் பேசிவருகிறார்கள்.

சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தில் இருந்து முற்றுகைப் பேரணி புறப்படுவதாகத் திட்டமிட்டப்பட்டுள்ளது. ஆனால் போலீஸாரோ அதற்கு சற்று தொலைவில் இருக்கும் விருந்தினர் மாளிகை , ரயில்வே பாலப் பகுதியிலேயே பேரிகார்டுகளை குவித்து வைத்திருக்கிறார்கள்.

இன்று சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு கடற்கரை சாலை வழியாகத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் செல்கிறார்கள். இந்நிலையில் சேப்பாக்கத்தில் இருந்து கடற்கரை சாலைக்கு வரமுடியாதபடி அங்கேயே போலீசார் போராட்டக் காரர்களை தடுத்து நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இன்று காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஒரு மினி லாரி நிறுத்தப்பட்டு அதையே மேடையாக்கி அங்கே தலைவர்கள் பேச அனுமதியளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் பேசும்போது, “எதிர்பார்ப்பதைவிட அதிக கூட்டம் வரும் என்பதால் போலீசார் கைது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். கைதானாலும் மகிழ்ச்சியே.கைது செய்யப்படுவதற்குத் தயாராகத்தான் எல்லாருமே வருகிறோம். ஜனநாயக ரீதியில் அமைதியாக, தேசியக் கொடியேந்தி போராட்டம் நடைபெறும், உலமாக்கள் ஒழுங்குபடுத்துவார்கள்” என்று குறிப்பிட்டனர்.

அதேநேரம் சட்டமன்றம் நடக்கும்போது சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே தேசியக் கொடிகளோடு சிலர் முழக்கம் எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் சட்டமன்றத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon