மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கொரோனாவால் தொழில்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை: நிதியமைச்சர்!

கொரோனாவால் தொழில்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை: நிதியமைச்சர்!

கொரோனா வைரசால் உள்நாட்டுத் தொழில்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தாக்கத்தால் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் மருந்து உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியத் தொழில் துறையில் ஏற்படும் தாக்கம் குறித்து ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களுடனும், மத்திய அரசின் பல்வேறு துறை செயலாளர்களுடனும் நிதியமைச்சர் நேற்று ஆலோசித்தார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், ”இந்தியாவில் மருந்துகள் அல்லது பிற பொருட்களின் உடனடி விலை உயர்வு, பற்றாக்குறை இருப்பதாக தற்போது எந்த தகவலும் இல்லை. இந்த வைரசால் இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து சொல்லப்படும். இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இன்று பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

சீனாவிலிருந்து வந்த பொருட்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் இறக்குமதி செய்யப்படாமலேயே இருக்கிறது. அவற்றை விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் இதுபோன்ற பாதிப்புகளைச் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியா, இறக்குமதியைச் சார்ந்திருப்பதை இது குறைத்துள்ளது. ஆகவே, மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. இன்று நடைபெறும் ஆலோசனையைத் தொடர்ந்து உள்நாட்டுத் தொழில்களும் பொருளாதாரமும் பாதிக்கப்படாத வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, இந்தியாவின் முதல் 20 பொருட்களின் இறக்குமதியில் 43சதவிகித பொருட்களைச் சீனா வழங்குகிறது, இதில் மொபைல், கைபேசிகள், கணினி, உரங்கள் உள்ளிட்டவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon